தமிழகம் முழுவதும் எந்த செய்தித் தாள்களைத் திருப்பினாலும், எந்தச் சேனல்களைத் திருப்பினாலும் 'வெற்றி நடைபோடும் தமிழகமே...!' என்ற விளம்பரம் ஜொலித்தும், ஒலித்தும் கொண்டே இருக்கிறது. அதிலும், நேற்று 14.02.2021 பிதமர் மோடி தமிழகத்திற்கு வந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்ற நிலையில், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், திமுக தரப்பிலும் விமர்சனம் வெளியிடப்பட்டது. அதில் திமுக முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கையில், "முதலில் தமிழக மக்களுக்குத் துரோகம் செய்யும் தமிழக அரசு, தங்களுடைய கட்சி நிதியில் இருந்து இந்த விளம்பரங்களை வெளியிட வேண்டும். அரசு செலவில் ஏன் விளம்பரம் செய்கிறீா்கள்.
டெண்டரே விடாமல் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகள் மக்களை ஏமாற்றியது போதாது என்று, ஆட்சி முடிகிற நேரத்திலும் அவா்களை ஏமாற்றுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. உங்களுடைய அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக உள்ளது. இந்த வெற்று அறிவிப்புகளைக் கொண்டு வெற்றி நடை போடும் தமிழகமே என்று கூறுவது கேலிகூத்தாக இருக்கிறது. 320.5 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்ட, அணைக்கட்டிலிருந்து பிரியும் புதிய கால்வாய் திட்டத்தை அறிவித்துள்ளார். அவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா? டெண்டா் விடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதா?
இத்திட்டங்களுக்கு தொழில்நுட்ப அனுமதி, வேலை உத்தரவாதம், வழங்கப்பட்டுவிட்டதா? பொதுவெளியில் இத்திட்டம் குறித்த எந்தத் தகவல்களும் வைக்கப்படவில்லை. ஆனால், காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் மட்டும் நாட்டப்பட்டுள்ளது" குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பல கேள்விகளை தன்னுடைய அறிக்கை மூலம் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமியிடம் எழுப்பியுள்ளார்.