Skip to main content

"அதிமுக தோற்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

edapadi palanisamy talks about erode by election 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய, தேர்தல் பணிக்குழு அமைக்க எனப் பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்க ஈரோட்டுக்கு நேற்று நேரில் சென்றார் அதிமுக எடப்பாடி பழனிசாமி.  ஈரோடு பகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து இன்று மாநில அளவிலான நிர்வாகிகளை ஈரோட்டுக்கு அழைத்து தேர்தல் ஆய்வுக் கூட்டமும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு வாக்காளர் பட்டியல் விவரங்களையும் நேரிலேயே கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது இக்கூட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசும்போது, "இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி நமது உழைப்பினை செலுத்தி சிந்தாமல் சிதறாமல் வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய சரித்திர வெற்றியை நாம் பெற வேண்டும்.

 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே தெரியவில்லை என்று  சிலர் சொல்கிறார்கள். இன்னும், நான்கைந்து நாட்களில் பாருங்கள்., கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதிமுக கரைவேட்டி கட்டியவர்கள் மட்டுமே தெரிவார்கள். அதிமுக வீரர்கள், வீராங்கனைகள் ஆங்காங்கே முகாமிட்டு மக்களைச் சந்தித்து மிகப்பெரிய வெற்றிக்கு உழைப்பார்கள். அதை எதிரிகள் புரிந்து கொள்வார்கள். அதிமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என இன்னும் பலர் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். அதிமுக தோற்ற வரலாறு இல்லை. நாம் சரியான முறையில் உழைத்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். நம்மை நாம் தான் தோற்கடிக்க முடியும். வேறு யாராலும் தோற்கடிக்க முடியாது.

 

நமக்குள் உள்ள சிறு சிறு கருத்து வேறுபாடுகளை உள்ளத்தில் இருந்து பிடுங்கி எறிந்து விட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். உழைப்பு, தியாகம் இருந்தால்தான் வெற்றி என்ற மிகப்பெரிய சாதனையை அடைய முடியும்.  எல்லா கட்சியிலும் பிரச்சனை உள்ளது. திமுகவில் உச்சகட்ட பிரச்சனை உள்ளது. ஆனால், இரு பெரும் தலைவர்கள் இல்லாமல், இவ்வளவு பெரிய கூட்டம் அதிமுக மட்டுமே கூட்ட முடியும்.  உழைக்கும் தொண்டர்கள் ஒன்றிணைந்து, தடைகளை தகர்த்தெறிந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும்" என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்