பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு குறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், ''சமூகத்தில் முன்னேறிய சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய பாஜக அரசின் திட்டம். இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லி வந்த சிலர் இன்று இந்த இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். இதன் சூட்சமத்தை நான் விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை.
அரசியல் லாப நோக்கங்கள் குறித்து இந்த இடத்தில் பேச விரும்பவில்லை. எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது. முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த போது 'எக்னாமிக்கலி' என்ற சொல்லையும் சேர்க்கச் சொல்லி சில உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். இதனை பிரதமர் நேருவும் ஏற்கவில்லை, சட்ட அமைச்சர் அம்பேத்கரும் ஏற்கவில்லை. 'எக்னாமிக்கலி' என்ற சொல்லைச் சேர்க்கலாம் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு ஆதரவாக 5 வாக்குகள் மட்டுமே பதிவானது. 'எக்னாமிக்கலி' என்ற சொல்லைச் சேர்க்கக்கூடாது என்று 243 வாக்குகள் விழுந்தது. இப்படி இந்திய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்து தான் பொருளாதார அளவுகோல்.
இன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனத்தில் மூன்று நீதிபதிகள் ஆதரித்துள்ளார்கள். ஆனால் 1992 ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளதை இந்த இடத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். சமூக நீதிக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மை அமர்வுக்கும் எதிரானது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு என்பது. முன்னேறிய உயர்வகுப்பினருக்கு கிடைக்கும் உதவியைத் தடுப்பதாக யாரும் கருதத் தேவையில்லை. ஏழைகளுக்கான எந்தத் திட்டத்தையும் நாங்கள் தடுக்க மாட்டோம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதுதான் அண்ணா வகுத்துத் தந்த அறநெறி.
தமிழக அரசின் பெரும்பாலான சமூக நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுதான். இத்தகைய திட்டங்கள் குறிப்பிட்ட சாதி ஏழைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து ஏழை எளிய மக்களுக்கும்தான். அந்த வகையில் ஏழை மக்களின் வறுமையைப் போக்க மத்திய அரசு எந்த திட்டங்களைக் கொண்டுவந்தாலும் அதை ஆதரிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் சமூகநீதி கொள்கையை மடைமாற்றும் திருகு வேலையை இட ஒதுக்கீடு அளவுகோலாக மாற்றக் கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகோள்'' என்றார்.