தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதன் முதலாக இன்று விழுப்புரத்திற்குச் சென்றார். அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ள அரசு மற்றும் கட்சி எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்குச் சென்ற அவருக்கு விக்கிரவாண்டியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உருவச்சிலையைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இன்றிலிருந்து 2026ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாம் மேற்கொள்வோம். மூன்றை ஆண்டுக்கால திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளிகள் இருக்காங்க. அவர்களை ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும் எனச் சூளுரைத்து கலைஞரின் சிலையின் முன்பு உறுதியேற்போம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் யாராக இருந்தாலும், நம்மை எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்ப்பட்ட கூட்டணி அமைச்சாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, அவர்களுக்கு திமுக வெற்றியை மட்டுமே கொடுக்கும் என்று இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அதனையொட்டி கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் பேசுகையில் ‘த.வெ.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ எனக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதேபோல் ஊழல் கபடதாரிகளையும், பிளவாத சக்திகளாகச் செயல்படுபவர்களையும் தங்களுடைய எதிரிகள் என விஜய் குறிப்பிட்டுப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.