Skip to main content

‘எங்கே இருக்கிறது பாதுகாப்பு?’ - தூத்துக்குடி விஏஓ கொலைக்கு இபிஎஸ் கண்டனம்

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

'Where is the security?' EPS condemns Tuticorin VAO issue

 

தூத்துக்குடியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடியில் மணல் கடத்தல் தொடர்பாக புகார் அளித்த விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில், ராமசுப்ரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தப்பிச் சென்ற மாரியப்பன் என்பவரையும் தேடி வருகின்றனர். இது குறித்து விசாரணை செய்ததில் மணல் கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததே லூர்து பிரான்சிஸ் கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இந்நிலையில் கொலைக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது, “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ்  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

 

இது போன்ற தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதை சுட்டிக்காட்டி இவ்வரசை சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன். அதற்கு இவ்வரசு பாராமுகமாய் இருப்பது மட்டுமில்லாமல் மக்கள் மீதும் அரசு அதிகாரிகளின் மீதும் எந்த அக்கறையும் இன்றி இருப்பது மிகுந்த கண்டனத்துக்கு உரியது.

 

ஒரு அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? நாடக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தும் இந்த அரசின் முதல்வர் இனியாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திட்டவட்டமாக வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்