நாகை மாவட்டம், திருப்பூண்டியில் கீழ்வேளூர் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான டாக்டர் சித்து தனது சொந்த நிலத்தில் பிரத்யேகமாக ஹெலிபேட் அமைத்திருந்தார். அங்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய கமல்ஹாசனுக்கு பூங்கொத்துக் கொடுத்து வேட்பாளர் வரவேற்பு அளித்தபோது. தலைதெறிக்க வயல்வெளியில் திரண்டு வந்த பெண்கள், குழந்தைகள் என பலரும் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கமல்ஹாசனை ஆர்வத்துடன் பார்த்தனர். அவர்களைப் பார்த்த கமல்ஹாசன் புன்னகையோடு கையசைத்துவிட்டு, அங்கிருந்து திறந்தவெளி வாகனம் மூலம் திருப்பூண்டி கடைத்தெருவில் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் சித்துவை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கமலஹாசன் பேச்சை தொடங்கியதுமே 'மைக்' மக்கார் செய்ததால், அதனைச் சரி செய்யும் முயற்சியில் தொண்டர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு மைக் இயங்கிய நிலையில் திருப்பூண்டி என்பதற்குப் பதிலாக திருத்துறைப்பூண்டி என்று தொகுதியை தவறுதலாக மாற்றிக் கூறினார். பின்னர், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி என்பதற்குப் பதிலாக திருப்பூண்டி தொகுதி என்று மீண்டும் தனக்கே உரிய ஸ்டைலில் கமல்ஹாசன் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மக்கள் மத்தியில் எழுந்த சலசலப்பை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட கமல்ஹாசன் பேச்சை தொடங்கினார்.
"தமிழக காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. தமிழகத்தில் ஊழல் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை மாற்றியமைக்க அற்புதமான திட்டங்களை மக்கள் நீதி மய்யம் தீட்டி வைத்துள்ளது. எனது சினிமாவான இந்தியன் படத்தில் தாத்தாவாகப் பெற்ற பிள்ளையைக் கொள்வதுபோல் என் வாழ்கையில், நிஜத்திலும் ஊழல் செய்தால் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் கொன்றுவிடுவேன்" என்று ஆவேசமாகப் பேசிவிட்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் பட்டுகோட்டை புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
கமல்ஹாசனின் பிரச்சார வருகை குறித்து வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான செள.சிவச்சந்திரன் கூறுகையில், "கமல்ஹாசன் வருமையை ஒழிப்பேன், ஊழலை ஒழிப்பேன் என்கிறார். ஆனால், ஆடம்பரத்தின் உச்சத்தில் நின்று கொண்டு அப்பாவி மக்களை இன்னும் மோகத்திற்கு அடிமைப்படுத்தி ஓடவைக்கிறார். அவர் வந்து இறங்கியது கீழ்வேளூர் தொகுதி. அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் நிரம்பிய தொகுதி. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் வாழும் தொகுதி. கஜா புயலால் நிலைகுலைந்து இன்னும் கரையேராத நிலையிலுள்ள தொகுதி. அந்த மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க வந்தவர் வயக்காட்டில் பிரத்யேகமாக ஹெலிபேடு அமைத்து ஜரூராக வருகிறார். இது தான் மேல்தட்டு அரசியல். அவர் மேலோட்ட வலதுசாரி அரசியல் செய்வார் என்பதற்கு இதுவே உதாரணம்" எனத் தெரிவித்தார்.