பம்பரம் சின்னம் வழங்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் கூறினாலும் நீதிமன்றம் எங்களுக்கு சின்னம் வழங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, “பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தான் கூறி உள்ளது. நீதிமன்றம் கூறவில்லை. மதியம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது எங்கள் வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைத்து பம்பரம் சின்னத்தை கேட்பார்கள். சின்னம் விவகாரத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்றால் அவரின் சின்னம் என்ன என்பதை தேடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 24 மணி நேரம் கூட தேவைப்படாது.
பா.ஜ.கவை உண்மையாக எதிர்க்கும் அணியாக தி.மு.க அணி இருக்கிறது. திருச்சியில் அந்த அணி சார்பில் ம.தி.மு.க போட்டியிடுகிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். நீதிமன்றம் எங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறோம். ஒருவேளை அது காலதாமதமானால் வேறு சின்னங்களில் போட்டியிடுவோம்.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள். ம.தி.மு.க, விசிக மட்டுமல்ல நாம் தமிழர் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கவில்லை. பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக பா.ஜ.கவிற்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
அதிமுகவினர் பதட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சின்னமே முடங்க வாய்ப்பிருக்கிறது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எனக்கு வாழ்த்து கூறுவதை போல் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பா.ஜ.கவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை கொண்டு ஏதாவது ஒரு விதத்தில் இடைஞ்சல் கொடுத்து வருகிறார்கள். என்னை வெளியூர் வேட்பாளர் என்கிறார்கள். நான் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளேன்” என்றார்.