கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்பழகனின் மரணம் தந்த எச்சரிக்கையினால் கரோனாவின் தீவிரத்தைப் பலரும் இப்போது உணர்ந்திருக்கும் வேளையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. பழனிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ரிஷிவந்தியம் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திகேயனின் மனைவி மற்றும் எட்டு வயது மகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இது குறித்து கார்த்திகேயனிடம் நலம் விசாரிப்பதற்காக கட்சித் தொண்டர்கள் பலரும் அவரை போனில் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், "நான் நலமாக உள்ளேன். எனது மனைவியும் மகளும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை. அவர்கள் மருத்துவமனையில் உள்ளார்கள். நானும் எனது குடும்பத்தைச் சார்ந்த மற்றவர்களும் நலமாக உள்ளோம். நண்பர்களும், கழக தோழர்களும், நிர்வாகிகளும் என்மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள் என்பதை நானறிவேன். தயவுசெய்து என்னை தொலைபேசியில் தொடர்புகொள்வதை ஒரு சில நாட்கள் தவிர்க்கவும். என்றென்றும் மக்கள் பணியில் வசந்தம் க.கார்த்திகேயன், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்''’ என வாட்ஸ்அப் குழு மூலம் பதில் அளித்துள்ளார்.
கார்த்திகேயன் தன் மனைவி மகள் ஆகியோருடன் சில நாட்களுக்கு முன்பு திருவையாறில் நடந்த உறவினர் திருமணத்திற்குச் சென்று வந்திருந்தார். அதன்மூலம் அவர் குடும்பத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், 'ஒன்றிணைவோம்' திட்டத்தின்படி கட்சித் தலைமைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அனுப்பியிருந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் எம்.எல்.ஏ.-க்கள் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவித் திருந்தார்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் அங்கயற்கண்ணி, சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாவைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்றனர். அவர்களைப் பார்த்த ஆட்சியர் குராலா மாவட்ட செயலாளர் அங்கயற்கண்ணியிடம், உமது சகோதரர் கதிரவனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சையில் உள்ளார். உங்கள் வீடு தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் மனு கொடுக்க வந்துள்ளீர்கள். முதலில் உங்களைப் பரிசோதனை செய்து கொண்டீர்களா?’ என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு மா.செ. அங்கயற்கண்ணி, "எனது குடும்பத்தினர் சகோதரர் அனைவரும் சங்கராபுரத்தில் உள்ளனர். நான் எனது உறவினர் எம்.எல்.ஏ உதயசூரியன் வீட்டில் வடக்க நந்தலில் தங்கியுள்ளேன். சொந்த ஊருக்குச் செல்லவில்லை'' என்று பதில் கூறியுள்ளார்.
அதன்பிறகு அவர்களிடம் மனு வாங்கிய மாவட்ட ஆட்சியர், "எதற்கும் நீங்கள் பரிசோதனை செய்துகொள்வது நல்லது'' என்று கூறி அனுப்பி உள்ளார். அப்போதுதான் மாவட்டச் செயலாளர் அங்கயற்கண்ணியின் குடும்பத்தில் அவரது சகோதரருக்குத் தொற்று இருப்பதே மற்றவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகும் போது பொதுமக்களை ஒரு இடத்தில் கும்பலாகக் கூட்டி வைத்துக்கொண்டு நிவாரணம் வழங்குவதன் மூலம் நோய்த் தொற்று பரவும். எனவே நிவாரணம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்கள் மூலம் வீட்டுக்கு வீடு தனித்தனியாகக் கொண்டுசென்று கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது யார் கொடுத்தது? எந்த அமைப்பு கொடுத்தது என்று மக்களிடம் எடுத்துக்கூறி கொடுத்தால் போதும். அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
தேர்தலின்போது அரசியல் கட்சிகள், அதிகாரிகளுக்கு தெரியாமல் வீடு வீடாகச் சென்று ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஓட்டு வாங்க வில்லையா? பணம் கொடுத்தவர்களுக்கு மக்கள் விசுவாசமாக ஓட்டு அளித்து ஜெயிக்க வைத்துள்ளார்கள். இப்போது நிவாரணம் கொடுக்கும்போது மட்டும் ஏன் கும்பல் கூட்ட வேண்டும்.
உயர்நீதிமன்ற உத்தரவிலும் நிவாரணம் கொடுக்கும் போது கூட்டம் போடக்கூடாது என்று பல்வேறு விதிமுறைகளைக் கூறியுள்ளது. ஆனால் அதையெல்லாம் அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் பெரிதுபடுத்தாமல் மக்களைக் கூட்டி வைத்துக்கொண்டு நிவாரணம் கொடுத்ததின் விளைவுதான் அன்பழகன் எம்.எல்.ஏ. உயிர் போனது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத காரணத்தினால்தான் தொடர்ந்து அரசியல் கட்சி வி.ஐ.பி.-களை கரோனா துரத்துகிறது. இனியாவது இதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.