ஆறாவது முறையாக களமிறங்கியுள்ள தி.மு.க.வைச் சேர்ந்த ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் சக்கரபாணி தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர், அனுப்புபட்டி, வேலூர், புதுக்கோட்டை, சத்திரப்பட்டி, கோபாலபுரம், சிந்தலவாடி, கணக்கம்பட்டி, அமரபூண்டி, வேப்பன் வலசு, பெருமாள் நாயக்கன் வலசு உள்பட சில கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், "ஒட்டன் சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் சுமார் 300 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. 170- க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள், பேருந்து வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. பழநி முதல் சென்னைக்கு புதிய ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரை ரூபாய் 700 கோடி மதிப்பில் அகல ரயில் பாதை கொண்டு வரப்பட்டது. இதுபோல் எண்ணற்ற பல திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
வருகிற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஊரக வேலை உறுதித் திட்டப் பணி நாட்கள் 100- லிருந்து 150 ஆக உயர்த்தப்படும். கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூபாய் 4 லட்சம் மானியம் வழங்கப்படும். ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் அரசு கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு வட்டங்கள் தோறும் நவீன வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரப்படும். மேலும் தொகுதியில் விடுபட்டுபோன அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்படும். எனவே, வருகிற சட்டமன்றத் தேர்தலில் 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற வைக்க வேண்டும்" என வாக்கு சேகரித்தார்.