புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனுக்கு வாக்கு சேகரிக்க வடகாடு, மாங்காடு, கைகாட்டி, கீரமங்கலம், மேற்பனைக்காடு கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
அப்போது அவர், “எங்கள் கூட்டணியைப் பாருங்கள், சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ், மக்கள் உரிமைக்காக போராடிய திமுக, தலித் மக்களுக்காக போராடும் விசிக, பாட்டாளி மக்களுக்காக போராடும் கம்யூனிஸ்ட்கள், இந்தியா, இலங்கை மட்டுமின்றி உலகத் தமிழர்களுக்கு எங்கே அநீதி நடந்தாலும் போராட்டக் குரல் கொடுக்கும் வைகோவின் மதிமுக போன்ற பல கட்சிகள் இணைந்துள்ளது.
எடப்பாடி விவசாயிதான் மறுக்கவில்லை. எடப்பாடியார் நாட்டிய அடிக்கற்களை எடுத்து ஒன்று சேர்த்தால் பெரிய கட்டிடமே கட்டலாம். அவ்வளவு அடிக்கற்கள் நாட்டியுள்ளார். மறுபடியும் டெல்லி போய் அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்தார். 20 கிமீ தூரத்தில் போராடும் விவசாயிகளை காணப் போகவில்லை. டிராக்டர் பேரணி நடத்துகிறார்கள் அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. 9 விவசாயிகள் தற்கொலை, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கிறார்கள்.
பகலில் போனால்தான் மோடி கோவிப்பார், இரவிலாவது முண்டாசு கட்டிக்கிட்டு போயாவது நானும் விவசாயினு ஆறுதல் சொல்லி இருக்கலாம். விவசாயிகளை வஞ்சிக்கும் விவசாய சட்டங்களை நாங்கள் எதிர்த்தபோது ஆதரித்த ஒரே கட்சி அதிமுக. அப்பறம் எந்த முகத்தோடு விவசாயிகளிடம் ஓட்டுக் கேட்கிறார்கள். இந்தியாவில் 86% பேர் சிறு குரு விவசாயிகள்தான். பல வித்தகர்கள் இருந்த நாற்காலியில் இன்று தலையாட்டிப் பொம்மைகளை வைத்திருக்கிறோம்.
இலங்கை போர்க் குற்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழர்களே இல்லாத 22 நாடுகள், தண்டிக்க வேண்டும் என்கிறது. ஆனால், இந்தியா புறக்கணித்ததால் பாரதப் பிரதமருக்கு நன்றி சொல்கிறார் இலங்கை அதிபர். 5 மணிக்கு தேர்தல் அறிவிப்பு என்பதைத் தெரிந்து கொண்டு 3 மணிக்கு அவசரமாக சுய உதவிக்குழு கடன் ரத்து, 6 பவுன் நகை கடன் ரத்து என்று எழுதுகிறார். இதில் பயனடைந்தவர்கள் யார்? எவ்வளவு தொகை, எந்த வங்கி? சிறிது நேரம் இருந்திருந்தால் மளிகை கடன் ரத்து என்று கூட சொல்லி இருப்பார். கடன்களை ரத்து செய்ய எவ்வளவு வழிமுறைகள் விதிமுறைகள் உள்ளது தெரியுமா?
ரூ.60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து செய்த போது 3 தவணைகளாக பணம் கட்டிவிடுகிறேன் என்று ரிசர்வ் வங்கிக்கு எழுதிக் கொடுத்த பிறகே ரத்து செய்தேன். அதன் படி வங்கிக்கு ரத்து செய்த தொகையை திருப்பி கட்டினோம். தலையில் வைக்கும் "மல்லிகை பூ, ரோசாபூ வரிசையில் அறிவிப் பூ.." வையும் சேர்த்துக்கொள்ளலாம் அவ்வளவு தான்.
திமுகவின் வெற்றிக்கு பிறகு பிரதான 7 வாக்குறுதிகளை உங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் தட்டிக் கேளுங்கள், நாங்கள் ஸ்டாலினை தட்டிக் கொடுத்து செய்ய சொல்கிறோம். 3.50 லட்சம் தமிழக அரசுப்பணி காலி இடத்தை நிரப்புவோம் என்கிற வாக்குறுதியை மிகவும் வரவேற்கிறேன்” என்று பேசினார். மேலும் அவர், “எதிரணி 1977ல் எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுக கட்சியில் வேட்பாளராக ஒரு தொண்டனும் கிடைக்கலயா? காங் கட்சியில் இருந்து ஒருத்தரை திருடனுமா? 60 நாட்களுக்கு முன்பு எங்களுக்கு துரோகம் செய்து மாறியவர் அடுத்த 60 நாளில் உங்களை ஏமாற்ற மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்” என்று ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் குறித்து பேசினார்.