![The Double Role of Thiruma Tamilisai Soundararajan Review](http://image.nakkheeran.in/cdn/farfuture/1QPhBIt6yfFR2udi8lGfC2KqjJa5fNQE3vWSCxtwuqI/1733541244/sites/default/files/inline-images/tamilisai-art_1.jpg)
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (06.12.2024) மாலை சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழ்நாட்டில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இல்லை. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்” எனப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் பேசுகையில், “தொல். திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட வர முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்பொழுது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்” எனப் பேசினார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்குமானவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவின் மனசாட்சி அங்கே இருக்கிறது என்று அவர் கட்சியில் இருக்கும் துணைப் பொதுச் செயலாளரே கூறுகிறார்!.
இன்றைய அரசியல் நாடகத்தில் திருமாவின் இரட்டை வேடம் ஒரு வேடத்தின் மனசாட்சி அங்கே! மேடையில் ஒரு வேடம்! இங்கே மன்னர் ஆட்சி நடத்தும் திமுகவின் அரசாட்சியோடு... ஒரு வேடம்! திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு வேடம்!. திமுக கூட்டணிக்கு ஆதரவாக... நேராகச் செல்லாதது நேர்மையான முடிவா? அல்லது நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம்... என்ற முன்னெச்சரிக்கை? முடிவா.. அல்லது எச்சரிக்கை செய்யும் முன்னோட்டமா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.