Skip to main content

கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிமுக எம்.எல்.ஏ.க்கள்! - அதிருப்தியில் மக்கள்!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

ADMK, MLAs not attending development meeting .. People dissatisfied

 

மத்திய, மாநில அரசின் நிதிகள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் திட்டங்களைக் கண்காணிப்பதற்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள எம்.பிக்களின் தலைமையில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு உள்ளது.

 

இந்த குழுவின் தலைவராக அந்த மாவட்டத்துக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பார். செயலாளராக மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார். இந்தக் குழு ஒவ்வொரு ஆண்டும் 2 முறை கூடி, மத்திய - மாநில அரசு திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதிகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதாவது ஊழல் நடைபெற்றுள்ளதா? திட்டங்களின் விதிமுறைகளின் படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களா? அதிகாரிகள் இதைக் கண்காணித்துச் செயல்படுகிறார்களா என்பன போன்ற பல கேள்விகளை முன்வைத்து ஆய்வு செய்வார்கள்.

 

இந்தக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், ஒன்றிய குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது துறைக்கு வந்த நிதி எவ்வளவு, செய்த பணிகள் என்ன என்பனவற்றை தெரிவிப்பர். இதில், குறைகள் இருப்பின் மக்கள் பிரதிநிதிகள் கேள்விகள் எழுப்புவர்.

 

பிப்ரவரி 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக் குழு கூட்டம், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமையில், துணைத் தலைவர் (ஆரணி எம்.பி.) விஷ்ணுபிரசாத் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நந்தூரி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள், 18 ஒன்றியங்கள் உள்ளன. 8 தொகுதிகளில் 5 தொகுதிகள் திமுக வசமும், 3 தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளன. அதே அளவுகோலின்படி ஒன்றியக் குழு தலைவர்களும் உள்ளார்கள்.

 

2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு, இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில், 3 முறை கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டங்களில் திமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்பென்னாத்தூர் பிச்சாண்டி, செங்கம் கிரி, போளுர் சேகரன், வந்தவாசி அம்பேத்குமார் போன்றோர் கூட்டங்களில் கலந்துகொண்டு அதிகாரிகளை நோக்கி கேள்விகளை எழுப்புகின்றனர். அதேநேரத்தில் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், ஆரணி சேவூர்.ராமச்சந்திரன் (இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்) செய்யார் – தூசி.மோகன் போன்றோர் தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், புறக்கணித்து வருகிறார்கள். தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கத் துவங்கியுள்ளார்கள்.

 

மக்களுக்கான திட்டங்களில் தொடர்ச்சியாக ஊழல்கள் நடைபெறுகிறது. அதிகாரிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பொதுமக்கள் தரப்பில் புகாராக உள்ளன. அதிகாரிகளைத் தப்பு செய்யவைப்பதே ஆளும்கட்சியினர்தான். இதனால்தான் அதிமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்