தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதிப்பங்கீட்டுக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகள் உறுதியானது. அதைத் தொடர்ந்து, தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று (தனி) சட்டமன்றத் தொகுதிகளும், மூன்று பொது சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை (தனி), அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தி.மு.க. கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதிகள் அனைத்தும் கிடைக்கவில்லை. கூட்டணிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் சில தொகுதிகளை மாற்றி பெற்றோம். நாளை மறுநாள் (13/03/2021) வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.