வருகிற 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
''விடியல் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசே, வாக்களித்த மக்களை வஞ்சிக்காதே. நீட் தேர்வை ரத்து செய்வது உறுதி உறுதி உறுதியோ உறுதி என ஒவ்வொரு கூட்டத்திலும் முழங்கியதைக் கேட்டு, சரி ஏதோ செய்வார்கள் போலிருக்கிறது என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் நம்பி வாக்களித்தார்கள். சொற்ப எண்ணிக்கை வாக்கில் வெற்றிபெற்ற திமுக, நீட் தேர்வு தேதி உறுதி செய்யப்பட்ட பிறகு மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகுங்கள் என உத்தரவிட்டிருக்கிறது.
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களின் விலையும் கட்டுமானப் பொருட்களின் விலையும் அதிகரிப்பது வாடிக்கையாகிவிட்டது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் நாணயமான செயல் அதுதான் நாகரீகமும் கூட. ஆனால் அவற்றைப் பற்றி பேசாமல் 'அணில் ஓடுவதால் மின்சாரம் தடைபடுகிறது' என கூச்சமின்றி பேசுகிறது. தமிழ்நாடெங்கும் நாள்தோறும் பலமுறை மின்வெட்டு நடக்கிறது'' என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இவையனைத்தையும் கண்டித்து வரும் 28ஆம் தேதி அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.