கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதி சேலத்தில் நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டிசம்பர் 17 ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெற இருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மாநாடு டிசம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.