“திமுக இன்னும் ஐந்து வருடம் மட்டும் அல்ல 50 வருடம் ஆட்சியில் இருக்கும்” என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டூரில் நடந்த கலைஞரின் 99வது பிறந்தநாள் கூட்டத்தில் பேசினார்.
திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் 99வது பிறந்த நாளை திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் தொகுதி வாரியாக பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காட்டூர் பகுதி திமுக சார்பில் நடந்த கலைஞரின் 99வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளரும் 42 வது வார்டு கவுன்சிலருமான நீலமேகம் தலைமை வகித்தார். அதில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “கலைஞர் எந்த ஒரு திட்டத்தை தொடங்குவது என்றாலும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில்தான் தொடங்குவார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காட்டூர் பாப்பா குறிச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சத்துணவு திட்டத்தை தொடங்கினார். தற்பொழுது திருவெறும்பூர் தொகுதிக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க் கட்சியாக இருந்தபோது போராடி செய்தோம் தற்பொழுது ஆளுங்கட்சியாக இருப்பதால் மக்களின் தேவையான அனைத்தையும் செய்வோம்.
திருவெறும்பூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்தும், இன்னும் செய்வோம் செய்து காட்டுவோம் என்ற உத்வேகம் என்னிடத்தில் உள்ளது. சிலர் நம்மை விமர்சனம் செய்வதை காதில் வாங்கி கொள்ள வேண்டாம் வாக்களித்த நீங்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள்.
திமுக கட்சி கிடையாது; மக்களுக்கான இயக்கம். அதனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஆட்சியில் இருந்தபோதும் இல்லாவிட்டாலும் செய்வோம். தேர்தலின்போது 505 வாக்குறுதிகள் கொடுத்தோம். அதில் 250க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்று உள்ளோம். திமுக இன்னும் 5 வருடம் ஆட்சியில் இருக்கும் என கூறுவதை விட்டுவிடுங்கள். இன்னும் 50 வருடம் திமுக தான் ஆட்சியில் இருக்கும்” என்று கூறினார்.