சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்னரை வருடங்கள் இருக்கும் சூழலில், தேர்தலை எதிர்கொள்ள கடந்த சில மாதங்களாகவே தி.மு.க தயாராகி வருகிறது. இதற்காக, தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் முகமாக, மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கிய தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை இரு மாதங்களுக்கு முன்பே தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். ஒருங்கிணைப்புக்குழுவினர் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
கட்சி ரீதியாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள தி.மு.க, அரசு ரீதியாகவும் தேர்தல் பணிகளைத் துவங்கியிருக்கிறது. குறிப்பாக, ஆட்சிக்கு எதிராக இருக்கும் சமுதாய நலன் சார்ந்த பிரச்சனைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
அதாவது, பா.ம.க வலியுறுத்தும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு பிரச்சனை, வட தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்த பிரச்சனை உள்பட ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இருக்கும் கோரிக்கைகளை ஆராய்ந்து ஒரு அறிக்கைத் தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சமூக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்வரின் ஆலோசனைப்படி நடத்தப்பட்டுள்ள ஆலோசனையின் முதல் கட்டமாக, துறையின் அதிகாரிகள், சலவைத் தொழிலாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை அண்ணா அறிவாயலத்துக்கு அழைத்து கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசித்துள்ளனர். அதன்படி வருகிற திங்கள்கிழமை, மண்பாண்டம் தொழில் செய்யும் குலாலர் சமூகத்தின் தலைவர்களையும், பிரதிநிதிகளை அழைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்த தலைவர்களும் அழைக்கப்படவிருக்கின்றனர்.
ஒரு சமூகத்தில் அம்மக்களின் நலன்களுக்காக நிறைய அமைப்புகள் இருக்கும். அவர்களும் தங்களின் கோரிக்கையை வைத்து போராடி வருகின்றனர். அதனால், ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சமூகத்துக்கு மாநில அளவில் அமைப்பு இருக்கும்; அதே சமயம், சில அமைப்புகள் மாவட்ட அளவில் மட்டுமே செயல்படும். அதனால், மாநில அளவில் அமைப்பு செயல்பட்டாலும், மாவட்ட அளவில் அமைப்பு செயல்பட்டாலும் அனைத்து அமைப்புகளையும் அழைத்து ஆலோசிக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டு அதனை முன்னெடுத்து வருகிறார்கள் .
அந்த ஆலோசனையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொடுக்கலாமா? கொடுப்பது குறித்து உங்கள் பார்வை என்ன? இந்த இடஒதுக்கீட்டை தவிர்த்து, உங்களின் சமூக கோரிக்கைகள் என்ன? என்பது பற்றியெல்லாம் விசாரிக்கிறார்கள். துறை வாரியான ஆலோசனைகள் முடிந்து அது குறித்த ரிப்போர்ட் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, உளவுத்துறை மூலம், சமூக அமைப்புகளில் வலிமையாக இருப்பது எது ? கோரிக்கைகளில் எது வலிமையானது ? என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்து அதன் பிறகு ஒரு முடிவை எடுக்க திமுக திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.