
சட்ட சபையில் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் பின் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகரின் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
இதன் பின் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் துணைச்செயலாளர்கள் நியமனம் தொடர்பாக கடிதம் கொடுத்து சுமார் இரண்டு மாத காலம் ஆகிறது. நேற்று வரை அவர்கள் சரியான முடிவு எடுக்கவில்லை. நியாயமாக நடுநிலையோடு செயல்படும் சபாநாயகர் அரசியல் நோக்கோடு செயல்படுவதாக நாங்கள் நினைக்கின்றோம். சட்டமன்றம் என்பது வேறு. கட்சி என்பது வேறு. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதங்கள் மற்றும் எங்கள் நியாயத்தையும் தெரிவித்தோம்.அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறத்தின் வழியாக சட்டசபை வழியாக பழிவாங்க நினைக்கின்றது” எனக் கூறினார்.