Skip to main content

“நீட் தேர்வு விலக்குதான் எனது லட்சியம்” - முதல்வர் ஸ்டாலின்

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

cm stalin campaign erode east byelection

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கான முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

அந்த வகையில், ஈரோடு சம்பத் நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “பெரியார் பிறந்த மண் ஈரோடு. திமுகவின் அடித்தளமே ஈரோடுதான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும், அவருக்கு குருகுலமாக இருந்தது ஈரோடுதான். இந்த இடைத்தேர்தல் எந்த சூழலில் வந்திருக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். எப்போதுமே தந்தை இறந்து, அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு மகன் வருவார். ஆனால், நம் சூழ்நிலை எவருக்கும் வரக்கூடாது. மகன் இறந்து அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ் உங்களிடத்திலே வாக்கு கேட்டு வந்திருக்கிறார். ஆகையால், அவருக்காக நானும் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய வைக்க வேண்டும். 

 

கலைஞர் கூறிய ‘சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்’ என்பதையே நானும் நினைவுபடுத்துகிறேன். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்லாததையும் செய்வோம். பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் வாக்குறுதியை நிறைவேற்றி பலர் பயனடைந்து வருகின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட முக்கியத் திட்டங்களில் மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஒன்று. மாணவர்கள் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அதனால்தான் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவில் எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தி வருகிறோம். கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறோம். 

 

நீட் தேர்வு விலக்கு சட்டம் இரண்டு முறை நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால், இதுவரை தமிழகத்தில் ஆளுநரோ, மத்திய அரசோ சிந்திக்கவுமில்லை; கவலைப்படவுமில்லை. ஆனால், என்னுடைய காலத்திலேயே நீட் தேர்வுக்கான விலக்கை பெற்றாக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்; கொள்கை. அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி எத்தனையோ திட்டங்களை நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உங்களிடத்திலே பொய்யான தகவலை தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் திமுக சொன்ன எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

 

நாங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் தயவு செய்து கண் மருத்துவரைப் பார்த்து கண்ணாடி வாங்கிப் போட்டு நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியலைப் படித்துப் பாருங்கள். இல்லையென்றால், நான் பேசுவதையாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 85 சதவீதப் பணிகளைச் செய்து முடித்திருக்கிறோம். இன்னும் மிச்சம் இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றிக் காட்டுவேன். நான் சாதாரண ஸ்டாலின் இல்லை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மிச்சம் இருக்கும் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை. நீங்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். அதிமுக ஆட்சியில் நிதி நிலைமையை சரியாக வைத்துவிட்டுச் சென்றிருந்தால் ஆட்சிக்கு வந்த உடனே அதையும் நிறைவேற்றியிருப்போம். கொள்ளையடித்துவிட்டு அரசு கஜானாவை காலியாக வைத்துவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். அது அனைத்தையும் சரி செய்து கொண்டிருக்கிறோம். மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் உரிமைத்தொகை வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்