பத்துக்கு பத்தில் ஓலை வேய்ந்த அறை, அதற்குள் ஒரு கட்டில், மேஜை, அலமாரி. இவைதான் குடியாத்தம் தனித்தொகுதி எம்.எல்.ஏ. காத்தவராயனுக்கு சொந்தமாக இருந்தவை. கிளைச் செயலாளர், ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர், மத்திய மாவட்ட துணைச்செயலாளர்... என படிப்படியாக தி.மு.க.வில் தன்னை வளர்த்துக்கொண்டவர். பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிகாரிகளைச் சந்தித்து மக்கள் பிரச்சினைகளைப் பேசுவார்.
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/uyVfj7PvIzPXFcndCDiwTDxtodFdIKRBpxl6t-BCnGY/1583474248/sites/default/files/inline-images/674_1.jpg)
இதுபோன்ற செயல்பாடுகள்தான் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பேரணாம்பட்டு நகராட்சியின் நகரமன்ற தலைவராக காத்தவராயனை ஆக்கியது. 2016-ல் குடியாத்தம் எம்.எல்.ஏ. சீட் கேட்டபோது கிடைக்கவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு நடந்த 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில், மீண்டும் குடியாத்தத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். உட்கட்சிப் பூசல் மீண்டும் தடுத்தது. அதைத் தாண்டியும் மக்கள் செல்வாக்கு இருந்ததால், தலைமை காத்தவராயனுக்கு சீட் ஒதுக்கியது. அ.தி.மு.க.வினரே தேர்தலில் காத்தவராயனை ஆதரித்ததுதான், அவரது எளிமைக்கும், நேர்மைக்கும் கிடைத்த வெற்றி.
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/8nxOVQMXNXlYTx_voBah_RpEwL4lOiyzyjJqCa1iQLA/1583474321/sites/default/files/inline-images/675_2.jpg)
தேர்தலில் வெற்றிபெற்றாலும் எந்த பந்தாவும் காட்டியதில்லை. சில ஆண்டுகளாக இதயநோயால் அவதிப்பட்டு வந்தார். அறுவை சிகிச்சை செய்து ஓரளவுக்கு குணமடைந்திருந்த நிலையில்தான், திடீரென பிப்ரவரி 28-ந் தேதி காலையில் உடல் நலக் குறைவால் காத்தவராயனின் உயிர் பிரிந்தது. எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெறும் 9 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தவர் காத்தவராயன். திருச்சி தெற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. மரியம்பிச்சை, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் வரிசையில், குறைந்த கால அளவே எம்.எல்.ஏ. பதவி வகித்து மறைந்தவர் காத்தவராயன் என்கிறார்கள்.
அவருக்கென்று தனியாகக் குடும்பம் கிடை யாது. சலவைத் தொழிலாளியாக இருந்த காத்தவ ராயன், இளமைக் காலத்தில் ஒரு பெண்ணைக் காதலித்தார். உயர்படிப்புப் படித்த அந்தப் பெண்ணுக்கும் காத்தவராயன் மீது காதல் இருந்தது. ஆனால், கைகூட வில்லை.
நாட்டார் தெய்வமாக வணங்கப்படும் காத்தவராயன், ஆரிய மாலாவைக் காதலித்து கைகூடாமலேயே வாழ்ந்து, கழுவில் ஏற்றப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. இந்தக் காத்தவராயன் கடைசிவரை காதலை நெஞ்சில் சுமந்தபடி, திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்க்கையின் முடிவை எய்திவிட்டார். அவருக்குச் சேர வேண்டிய, மாதாந்திர உதவித்தொகை இனி அவரது சகோதரர் குடும்பத்திற்கு கிடைக்கலாம் என்கிறார்கள் சட்டமன்ற செயலக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
எம்.எல்.ஏ. காத்தவராயனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கண்ணீர்விட்டு கதறியழுதார். தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அமைச்சர் வீரமணி உள்ளிட்ட பலரும் இந்த இறுதி நிகழ்வில் பங்கெடுத்தது, கட்சிகள் கடந்து காத்தவராயன் பெற்றிருந்த நன்மதிப்பைக் காட்டியது. குடிசை வீட்டில் ஒரு எம்.எல்.ஏ. என்பதே இன்றைய காலத்தில் அரசியல் அதிசயம்தானே.