மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி விரைவில் வரும் என அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்தார்.
கன மழையால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு, தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் (பெட்ஷீட்) போர்வைகள், 6 லாரிகளில் அனுப்பும் பணியை இன்று காலை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் போர்வைகளை அனுப்ப, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரூபாய் 3.30 கோடி மதிப்பிலான போர்வைகள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எந்த மாநிலமும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் போது நமது தமிழக அரசு உதவுகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்திற்குத் தற்போது வேண்டிய உதவிகளைச் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் 'டெட்' தேர்வில், பாஸ் செய்த ஆசிரியர்கள், ஏழு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணியிடங்களை அரசுப் பள்ளிகளில் பெற, தகுதி படைத்தவர்கள். ஆனால், அப்படிப் பெற முடியவில்லை என்பதால் அவர்கள் டெட் தேர்வுச் சான்றிதழை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அதன்படி முதலமைச்சர் கடந்த மாதம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களுக்கான தகுதித் தேர்வு சான்றிதழுக்கான கால நீட்டிப்பைத் தரும்படி கோரினர். அதன்படி தற்பொழுது ஒருமுறை, டெட் தேர்வில் பாஸ் செய்தவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் பதவி பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில அரசைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் பெறுவதற்கு அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதற்காக கவர்னரின் ஒப்புதல் பெறுவதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து, மீன்வளத்துறை அமைச்சர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். எனவே விரைவில் தமிழக மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி வர உள்ளது. வரும் ஜனவரி மாதம் மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வர உள்ளது. இது குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்" எனக் கூறினார். "அது என்ன அறிவிப்பு" எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு "அது சீக்ரெட்" என புதிராகக் கூறிவிட்டுச் சென்றார்.