திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மாட்டுப்பொங்கல் வாழ்த்தோடு சேர்த்து திருவள்ளுவர் தின வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருவள்ளுவர் தினத்தை ஒட்டி வாழ்த்துகளைச் சொல்லியுள்ளார். அதில் காவி நிற உடையில் வள்ளுவர் நெற்றியில் விபூதிப் பட்டை அணிந்த நிலையில் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
வாழ்த்தில் அவர் கூறியுள்ளதாவது, “சிறப்பு மிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து மக்களுக்குத் தேவையானது, தேவையற்றது எனத் தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலையின் இச்செயல் குறித்து செய்தியாளர்கள் திமுக எம்.பி. கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “திருக்குறளை படித்தால் புரிந்துகொள்வார்கள். அதற்கும் காவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. முதலில் படிக்கணும். இல்லையென்றால் கலைஞரின் உரை தெளிவாக இருக்கிறது. அதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்” எனக் கூறினார்.
மற்றொருபுறம் ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள வள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதில் வள்ளுவர் வெள்ளை உடையில் இருந்ததைக் குறிப்பிட்டு இணையத்தில் அண்ணாமலைக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.