பொன்பரப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் பொன்பரப்பியில் நேற்று முன்தினம் தேர்தலின் போது நடைபெற்ற பிரச்சினை காரணமாக, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் ஒரு கும்பல் சாதி வெறியாட்டம் நடத்தியுள்ளது. ஏராளமான வீடுகளை அடித்து நொறுக்கியும், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்களை கொலை வெறியுடன் அந்த வன்முறைக் கும்பல் தாக்கியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேர்தல் நேர பிரச்சினையின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரியவில்லை. திட்டமிட்ட சாதிய வெறியாட்டமாகவே தெரிகிறது.
இத்தகைய சாதி வெறி தாக்குதல் ஜனநாயகத்திற்கும், மனித சமூகத்திற்கும் தலைகுனிவாகும். இப்படிப்பட்ட வன்கொடுமைகளுக்கு துணையாக இருக்கும் சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் எவ்வித அரசியல் லாபக் கணக்கையும் பாராமல் வன்முறையில் ஈட்டுபட்ட, தூண்டிவிட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அமைதிப் பூங்காவான தமிழகத்தில் இதுபோன்ற பிற்கோக்குத் தனமான சாதி வெறி தாக்குதல்களை அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
சாதிவெறியாட்டம் மூலம் திட்டமிட்டு மக்களை பிரித்து அரசியல் லாபம் பெற நடத்தப்பட்டுள்ள இத்தகைய தாக்குதலுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.