Skip to main content

திமுகவினரை மிரட்டி அதிமுகவில் இணைய சொல்லும் அமைச்சர் செங்கோட்டையன்... அதிருப்தியான  திமுகவினர்! 

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

dmk



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலும் குட்டு வாங்கியது அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பில் உள்ள பள்ளி கல்வித்துறை. தேர்வு தவிர்க்க முடியாதது என அவர் சொல்லி வந்த நிலையில், நீதிமன்றம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து என அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.


5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என புதிய முறையை கொண்டுவர நினைத்தவர்களால் வழக்கமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வே நடத்த முடியவில்லை என மீம்ஸ்களும் ரெடியாயின. இந்த நிலையில் செங்கோட்டையன் தனது தொகுதியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்களை அதிமுகவில் இணைய வேண்டும் என நேரடியாக மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

8 ந் தேதி காலை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சுப்பராயன் கோபிசெட்டி பாளையம் வந்திருந்தார். தொடர்ந்து அவர் குள்ளம்பாளையம் ஊராட்சியில் உள்ள நாதிபாளையம் என்ற இடத்தில் 200 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்து அங்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான செங்கோட்டையன் அமைச்சருக்குரிய தகுதியில் நடந்துகொள்வதில்லை. இந்தத் தொகுதியில்தான் ஏராளமான கிராவல் மண், ஆளும் கட்சியினரால் கொள்ளையடிக்கப்பட்டு கடத்தப்படுகிறது. அதேபோல் இங்கு உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை உயர்த்துவோம் எனக் கூறுகிறார்கள். அணையின் உயரத்தை உயர்த்துவதை விட அணையில் உள்ள சேற்றை வெளியே எடுத்தால் போதும் அணையின் ஆழம் அதிகமாகும்.

 

 

admk



இதையெல்லாம் செங்கோட்டையன் எதையும் செய்யாமல், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களை அ.தி.மு.க.வில் இணைய சொல்லி இப்போது மிரட்ட ஆரம்பித்துள்ளார். தி.மு.க.வை சேர்ந்த சில தொழிலதிபர்களை நேரடியாக அ.தி.மு.க.வுக்கு வரவேண்டுமென செங்கோட்டையன் மிரட்டியிருக்கிறார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஒரு அமைச்சராக இருப்பவர் மக்களுக்கு பொதுவானவராக இருக்க வேண்டும் அதை விடுத்து விட்டு இப்படி கட்சியில் இணைய சொல்லி மிரட்டுவது எல்லாம் நாகரீகமான செயல் அல்ல. அதேபோல் இந்த தொகுதியில் ஆளுங்கட்சியினர் தலையிட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் நடைபெறாமல் தடைபட்டால், நான் நேரடியாக வந்து போராட்டம் செய்வேன்'' என்றார்.


அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வுக்கு ஆள் பிடிக்கிறார். அதுவும் தி.மு.க.வை சேர்ந்தவர்களை மிரட்டி கூப்பிடுகிறார் என கம்யூனிஸ்ட் எம்.பி. திருப்பூர் சுப்பராயன் குற்றச்சாட்டு வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுந்தரப்பினரோ, செல்வாக்குடன் தொகுதியில் தொடர் வெற்றி பெறுபவர் எங்கள் அமைச்சர். அதைப் பொறுக்க முடியாமல் வீண் பழி சுமத்துகிறார்கள் என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்