2011 தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக சி.வி. சண்முகத்துடன் போட்டியிட்டு தோல்வி கண்டார் பொன்முடி. அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதிக்கு மாறி களமிறங்கினார். இந்தத் தொகுதியில் வெற்றிபெற்று தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ளார் பொன்முடி. இந்த தொகுதியில்தான் அவரது பிறந்த ஊரான இடையார் என்ற கிராமம் உள்ளது.
மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியில் கட்சித் தலைமையின் ஆதரவுடன் களம் காண்கிறார். இந்தமுறை இங்கு மும்முனைப் போட்டி என்று கூறப்படுகிறது. பொன்முடியை எதிர்த்து, அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ள கலிவரதன் வேட்பாளராக களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். தினகரனின் அமமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசனும், நாம் தமிழர் கட்சி சார்பில் முருகன் என்பவரும் மோதுகின்றனர்.
இதில் கலிவரதன், 2006இல் முகையூர் தொகுதியாக இருந்தபோது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். தேமுதிக வெங்கடேசன், அதிமுக கூட்டணியில் 2011இல் திருக்கோவிலூர் தொகுதியாக மாறிய பிறகு வெற்றிபெற்றவர். இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் இன்னாள் எம்.எல்.ஏ.வான பொன்முடியுடன் மோதுகின்றனர். இதில், பொன்முடி மற்றும் வெங்கடேசன் இருவரும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கலிவரதன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதியில் வன்னியர்கள் அதிக அளவில் உள்ளனர். அடுத்து தலித் மக்கள். அடுத்து உடையார், யாதவர்கள், நாயுடு மக்கள் பரவலாக உள்ள தொகுதி. பாமக, அதிமுக கூட்டணியில் இருப்பது பிஜேபி கவிவரதனுக்கு கூடுதல் பலம். அதே நேரத்தில் இவர் ஏற்கனவே பாமக எம்.எல்.ஏ.வாக இங்கு வெற்றிபெற்று பதவிக்காலம் முடிந்த பிறகு, திமுக, அதன் பிறகு விவசாயிகள் சங்கம், தற்போது பிஜேபி என கட்சி மாறி சென்றவர். அதனால் பாமக ஒத்துழைப்பு என்பது எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கூறமுடியவில்லை. இருந்தும் அதிமுக, பாமக கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக பிஜேபி கட்சி தலைமையிலிருந்து தொகுதிக்குள் ஆறு பேர் கொண்ட குழுவினர் களமிறக்கப்பட்டு, அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பரபரப்பாக தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டிருந்தால் இந்த தொகுதியில் தற்போதைய தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெறுவது உறுதி. அந்த அளவுக்கு தொகுதியில் தனித்த செல்வாக்கை வளர்த்து வைத்துள்ளார் வெங்கடேசன் என அத்தொகுதியினர் தெரிவிக்கின்றனர். மேலும், இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த மும்முனைப் போட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் முருகன் என்பவரும் களத்தில் உள்ளார். இருந்தும் திமுக பொன்முடி, பிஜேபி கலிவரதன், தேமுதிக வெங்கடேசன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இறுதிகட்டத்தில் திமுக பொன்முடி எந்தெந்த பகுதிகளில் வாக்காளர்களைக் கவர முடியுமோ, அதற்கான பணிகளை தன் குடும்பத்தினர் மூலம் பக்காவாக செய்வதற்கு தகுந்த ஏற்பாடு செய்து வைத்துள்ளார். எனவே பொன்முடியின் ஃபார்முலாவை உடைத்தெறிய கலிவரதன், வெங்கடேசன் ஆகியோர் முனைப்பு காட்டிவருகின்றனர். தங்களது தேர்தல் பணிகள் மூலம் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதில் வேகம் எடுத்துள்ளனர்.