திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தி.மு.க. ஒ.செ.வாக இருப்பவர் விசு அண்ணாதுரை. இவர் தி.மு.க. மா.செ. பூண்டி கலைவாணனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், சொந்தக் கட்சியினரையே ஒருமையில்தான் பேசுவார். அப்படிச் சமீபத்தில் இவர் காட்டிய அதிரடி, ஆடியோவாக வைரலாகி தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கும் காரணமாகி இருக்கிறது.
நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் செல்போனில் பேசும் அந்த ஆடியோவில், நாக்கூசும் வார்த்தைகளில் காட்டமாகப் பேசுகிறார் விசு அண்ணாதுரை. இந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து, ஆறுமுகம் புகார் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் பேசினோம். "அரசு கொடுக்கும் கரோனா நிவாரண பொருட்களை, அளவுக்கதிமாக தனக்கு வழங்கவேண்டுமென்று விசு அண்ணாதுரை கேட்டார். ஆனால், மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஒருவருக்கு அப்படியெல்லாம் தரமுடியாது என்று மறுத்துவிட்டேன். இதனால், என் மீதுள்ள ஆத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குக் குடிபோதையில் சென்று ரகளை செய்துவிட்டார். அங்கிருந்த பெண்களிடம் தகாத வார்த்தையில் பேசிவிட்டு, என்னையும் செல்போனின் வசைபாடினார். ஏற்கனவே இதுபோல் மூன்று முறை செய்திருக்கிறார். பொறுக்க முடியாமல் புகார் தந்திருக்கிறேன்'' என்றார் கலக்கத்துடன்.
விசு அண்ணாதுரையை போனில் அழைத்து இதுதொடர்பாக விளக்கம் கேட்டபோது, "ஆரம்பத்தில் இருவரும் பேசுவதை விட்டுவிட்டு, கடைசியில் நான் திட்டியதை மட்டும் புகார் சொல்கிறார். நீடாமங்கலம் அ.தி.மு.க. ஒ.செ. ஆதிஜனகரின் மைத்துனர்தான் இந்த ஆறுமுகம். அவர் எப்போதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். தி.மு.க.வினர் பொறுப்பிலிருக்கும் பகுதிகளில் முறையாகப் பொருட்கள் விநியோகிக்கவில்லை என்ற புகார் வந்தது. அதைக் கேட்டபோது அவர்தான் முதலில் தவறான வார்த்தையை விட்டார். உள்ளாட்சித் தேர்தல் சமயத்திலும் மனசாட்சி இல்லாமல் அதிமுகவுக்கு சாதகமாகச் செயல்பட்டார். அதை மனதில் வைத்தே இப்போது புகார் கொடுத்திருக்கிறார்'' என்றார்.
தி.மு.க. தலைமை வரை இந்த விவகாரம் சென்ற நிலையில், விசு அண்ணாதுரை மீது ஒழுங்கு நட வடிக்கை எடுத்துள்ளார் தி.மு.க. தலைவர்.