Skip to main content

திமுக எம்.பி வீட்டில் வருமான வரித்துறை சோதனை? - தி.மலையில் பரபரப்பு!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

DMK MP home income tax audit


கடந்த வாரம் திமுக தலைவரின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் எ.வ.வேலு வீடு, கல்லூரி, அலுவலகம் என சுமார் 16 இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. அந்த ரெய்டில் பணமாக எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரிடமும், அவரது மகனிடமும் அரசியல் தொடர்பாகப் பலவிதக் கேள்விகளை எழுப்பியது வருமான வரித்துறை.

 

இந்தச் சோதனையின்போது, வேலு குடும்பத்துக்கு அப்பாற்பட்ட இரு முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே வேலுவுடன் இருந்தனர். அதில் முக்கியமானவர் திருவண்ணாமலை தொகுதி எம்.பியும், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை. அவரிடம் சில கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு அவரை கண்டுகொள்ளாமல் விட்டனர்.

 

இந்நிலையில் வேலு மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை நடத்தியபோது, ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்து விசாரித்துள்ளனர். சபரீசன் குறித்து பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினார்கள் என்றும் அப்போது சபரீசனுடன் நெருக்கமாக உள்ள தொழிலதிபர்கள் குறித்தும் வேலுவிடம் கேள்வி எழுப்பினார்கள் என்றும் கூறப்படுகிறது. 

 

அப்போது பெறப்பட்ட சில தகவல்களின் அடிப்படையில், சபரீசனின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த வருவாய் புலனாய்வுத்துறை ஏப்ரல் 2 ஆம் தேதி திடீரென நீலாங்கரையில் உள்ள சபரீசன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

 

சபரீசனின் நண்பர்கள் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அதில், திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரையின் தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திருவண்ணாமலை மாவட்ட திமுகவினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்