கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தந்தது செல்லாது” எனத் தீர்ப்பளித்து தமிழ்நாடு அரசின் வன்னியருக்கான இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தமிழக அரசு தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வன்னியர் அமைப்புகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக எம்.பி.யும் பாமக இளைஞரணிச் செயலாளருமான அன்புமணி ராமதாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "10.5% வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக புள்ளி விவரங்களை எடுத்து சட்டம் இயற்ற வேண்டும். வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும். போதுமான அளவு தரவுகள் இல்லாததே தீர்ப்பு சாதகமாக இல்லாததற்கு காரணம்" எனத் தெரிவித்தார்.