சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சியில் பணியாற்றிவரும் முன்களப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை (ஆக. 9) நடந்தது. அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். அதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வெள்ளை அறிக்கை வெளியிடுவது என்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆண்டுதோறும் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது வரவு, செலவு எவ்வளவு என்ற விவரங்கள் தாக்கல் செய்யப்படும்.
அதுபோலதான் வெள்ளை அறிக்கையும். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் சீர்கேடு பற்றிய வெள்ளை அறிக்கை என்பது தவறான கருத்து. கடந்த அதிமுக ஆட்சியின்போது வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடன் பெறப்பட்டது. மொத்த கடனில் பாதிக்கும் மேற்பட்டது மூலதனமாக உள்ளது. ஒரு மாநிலம் வளர்ச்சி அடையவும், திட்டங்களை நிறைவேற்றவும் கடன் வாங்கியே ஆக வேண்டும். அதுமட்டுமல்ல, இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பல்வேறு கடன்களைப் பெற்றுள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கடன் பெறப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின்போது மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேநேரம், மின்சாதனங்களின் விலை, ஊதியம், எரிபொருள், எண்ணெய், போக்குவரத்துச் செலவுகள் என எல்லாமே விலை உயர்ந்துவிட்டது. இப்படி மின்சாதனங்களின் விலை உயர்ந்தபோதும் மின்கட்டணத்தை உயர்த்தவில்லை. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணைய உள்ளதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. அவர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி நேற்று (திங்கள்கிழமை) காலையில் கூட என்னிடம் பேசினார். டெல்லி சென்று கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை.
பெகாசஸ் விவகாரத்தில் உண்மை நிலை தெரிந்துதான் பேச முடியும். பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் உளவு பார்க்கப்பட்டதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான 3 வழக்குகளில், ஒரு வழக்கு மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் இப்போது அதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது. அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் யார் என்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்”. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.