தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறையின் தீவிர ரெய்டுகள் பல முக்கிய நபர்களையும் குறிவைத்து நடந்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், தொண்டமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தமிழகத்தில் அவருக்கு சொந்தமான 60 இடத்திற்கும் மேலாக சோதனையானது நடைபெற்றது. சோதனை நடைபெற்ற அனேக இடங்களில் மக்களின் கூட்டமும் மிகுதியாக காணப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிற நிலையில் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக போட்டியிட்ட கார்த்திகேய சிவசேனாதிபதியை நேரில் சந்தித்து இதுகுறித்த சில கேள்விகளை முன்வைத்தோம். அப்போது அவர் கூறியதாவது...
2021 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக போட்டியிட்டீர்கள். அப்பொழுது அந்த தொகுதி மக்கள் வெளியே சொல்ல முடியாத பல பிரச்சனைகளை உங்களிடம் கூறியிருப்பார்கள். அதில் என்னென்ன மாதிரி புகார் எல்லாம் உங்களிடம் கூறினார்கள்?
அந்த நேரத்தில் எங்களது தரப்பில் என்ன செய்தோம் என்றால் reportvelumani@gmail.com என்ற புது மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அனைத்து இடங்களிலும் மக்களுக்கு தெரியும் வகையில் பரப்பினோம். அந்த மின்னஞ்சலில் நாங்கள் கடைசியாக பார்த்த பொழுது 600 சில்லறை புகார்கள் வந்திருந்தது. அதில் சாட்சிகளுடன் இருக்கும் புகார்களை நேரடியாக முதல்வர் பார்வைக்கு அனுப்பியுள்ளோம். அதிலும் குறிப்பாக 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்ற தனித்துறை உருவாக்கப்பட்டிருக்கிறது அல்லவா அதற்கு அனுப்பியுள்ளோம். அவர்களிடம் கொடுத்த அந்த புகார்களில் எந்த எந்த புகார்கள் எந்த துறையை சார்ந்தது என பார்த்து அதனை அவர்களிடம் பிரித்து அனுப்பிவிடுவார்கள்.
உதாரணத்திற்கு என்னிடமே பதினேழு புகார்கள் வந்திருக்கிறது. அவர்களுடைய பெயரை கூற வேண்டாம் என நினைக்கிறேன் காரணம் அவர்கள் பயப்படுகிறார்கள். அதில் ஒருவர் மேட்டுப்பாளையம் அருகில் ஒரு பூமி வாங்குவதற்காக முன்பணம் மற்றும் பணத்தை வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளனர். அப்போது கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள மிக பெரிய தொழிலதிபர் ஒருவருடைய அலுவலகத்தை வேலுமணியின் அண்ணன் அன்பரசன் கட்டப்பஞ்சாயத்து பேசுவதற்காக உபயோகப்படுத்தி வருகின்றார். இவர்கள் அங்கு செல்வார்கள் அவர்களும் அந்த அலுவலகத்தை முழுவதுமாக திறந்து விடுவார்கள், இவ்வாறான ஒரு அராஜக போக்கை கடைப்பிடித்து வந்தார்கள் வேலுமணி தரப்பினர். அவ்வப்போது அங்கிருந்து கட்டபஞ்சாயத்து பேசுவதும் வழக்கமாக இருந்து வருகிற நேரத்தில் இவரிடமும் உங்களுக்கு பணம் வராது ஓடிவிடுங்கள் என மிரட்டியுள்ளார். அதற்கு நாங்க என்னங்க செய்ய முடியும் பல பேர் தாலியை அடமானம் வைத்து நிலத்தை வாங்கியுள்ளோம் அதனால் அதை விட முடியாது என பணம் கொடுத்தவர் கூறியுள்ளார்.
அதற்கு அவர் உயிர் வேணுமா இல்ல பூமி வேணுமா என பயங்கரமாக மிரட்டியுள்ளனர். இந்த மாதிரியான புகார்கள் எல்லாம் தற்பொழுது எங்களிடம் உள்ளது. நாங்கள் அந்த புகார்களை எல்லாம் இனி தான் டி.ஜி.பியிடம் புகாராக கொடுக்க உள்ளோம். அதே மாதிரி தொண்டாமுத்தூர் தொகுதியில் 5 கோடிக்கு மேலாக கிரையம் செய்ய யார் வந்தாலும் என்னை வந்து பார்க்க வேண்டும் என வாய்வழி உத்தரை பதிவுத்துறை அலுவலகத்திற்கு பிறப்பிக்கிறார். இதனை மீறி அங்குள்ள அலுவலர்களும் எதுவும் செய்ய முடியாது காரணம் அதை மீறி செய்தால் அவர்களின் வேலையிடத்தை மாற்றம் செய்வார்கள் அல்லது அவர்களை துன்புறுத்துவார்கள். மேலும் அவர்கள் குடும்பத்திற்குள் ஏதாவது பிரச்சனையை உருவாக்குவார்கள். உதாரணத்திற்கு கோவையில் சரவணக்குமார் ஏ.இ என்ற குரூப் 2 அலுவலரை குரூப் 1 அலுவலராக மாற்றுகிறார்கள். அதிலும் டிவிஷனல் இன்சார்ஜிற்கு மேலாக இன்சார்ஜ் டி.இ என்ற இல்லாத ஒரு பதவியை உருவாக்கி அமரவைக்கிறார்கள். இவரை அந்த பதவியில் அமரவைத்து பின்னர் ஸ்மார்ட் சிட்டி இன்சார்ஜ் ஆகவும் பதவி கொடுத்தனர்.
ஒன்றுமே தெரியாத ஒருவரை அந்த அளவிற்கு பதவி உயர்த்தி எங்கு கையெழுத்து போட சொன்னாலும் போடுவார் என்பதற்காக 4ஆயிரம் கோடி வரை அவர் ஒருத்தர் பொறுப்பில் விடுகிறார் வேலுமணி. அடுத்து ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணையும் வரும். அந்த ஊழல் விசாரணையின் போது கான்ட்ராக்டர்கள் அனைவரையும் விசாரிக்கனும். அப்போது தான் எத்தனை சதவீத ஊழல்கள் செய்தார்கள் என்பது தெரிய வரும். குளங்களில் கான்கீரிட் போட வேண்டும் என்ற பொய்யான கணக்கு என கோவை மாநகரை அசிங்கப்படுத்தியதான் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம். அதிலும் நேரு மைதானம் அருகே மிக பெரிய அரசமரம் ஒன்று உள்ளது ஆனால் அதை தகர்த்துவிட்டு காப்பரில் மரம் வைத்துள்ளார். இதெல்லாம் எதற்கு? என்ன நோக்கம்? இது மாதிரி செலவு செய்து அதிலிருந்து ஊழல் செய்வதில் வேலுமணி கில்லாடி. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். எதற்கு மற்றவர்களுக்கு லாபம் கொடுக்க வேண்டும் அதையும் நமக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தனது கம்பெனிக்கே கான்ட்ரக்டுகளை கொடுக்கும் எண்ணத்திற்கு வந்துவிட்டார். பேராசை, மமதை இதனுடைய உச்சத்தில் இருந்தவர் எஸ்.பி வேலுமணி.
இப்படி ஒரு மனிதரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. நேற்றெல்லாம் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள் அந்த வீடியோக்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. ஆதரவாக என்று யாரும் அங்கு இல்லை காரணம் காலையில் இட்லி, உப்புமா, பொங்கல், காப்பி, டீ மற்றும் பதினொறு மணிக்கு ரோஸ் மில்க் என கொடுக்கிறார்கள். அதே போல் மதியம் பிரைடு ரைஸ், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி மற்றும் பலவற்றை கொடுத்து மக்களை அழைத்து வந்து உட்கார்ந்திருந்தார்ளே தவிர யாரும் கவலை எல்லாம் அடையவில்லை. எனக்கெல்லாம் எதாவது ஒரு பிரச்சனை வந்தால் பத்து பைசா செலவு இல்லாமல் வந்து நிற்பார்கள் அவர்களாகவே வந்து, காரணம் நேர்மையாக வேலை செய்கிறோம். அவருக்கு பணம் என்கிற சூத்திரம் தெரியுமே தவிர வேறெதுவுமே தெரியாது. தேர்தல் சமயத்தில் நான் ஒரு கோவிலுக்கு சென்று தட்டில் ஐம்பது ரூபாய் போடுகிறேன். அவருடைய அண்ணன் கொஞ்ச நேரத்தில் வந்து ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கிறார். அதிலேயே தெரிகிறது இவர்களுக்கு பணம் என்கிற ஒன்று மட்டுமே தெரிகிறதே தவிர வேறொன்றும் தெரிவது இல்லை.