‘தந்தை ஓ.பன்னீர்செல்வத்தைப் போலவே மகன் ரவீந்திரநாத்குமாரும் ‘தர்மயுத்தம்’ நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார் போலும்!’
-காவி வேட்டி உடுத்தி, நெற்றியில் திருநீறு குங்குமமிட்டு, கண்களை மூடிய நிலையில் அமர்ந்து, வலக்கை விரல் நுனியையும் இடக்கை விரல் நுனியையும் இணைத்து ஹாகினி முத்திரை பிடித்து, ரவீந்திரநாத்குமார் தியானிக்கும் கோலத்தைப் பார்க்கும்போது, இப்படித்தான் சொல்லத் தோன்றும்.
ஓ.பி.எஸ்., தன் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு ஆன்மிகத்தை ஊட்டி ஊட்டி வளர்த்திருப்பார் போலும். ஸ்ரீவில்லிபுத்தூர் – செண்பகத்தோப்பில் உள்ள குலதெய்வக் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம், அர்ச்சகர்கள் மந்திரங்கள் சொல்லச் சொல்ல, சம்மணமிட்டு அமர்ந்து, உடலில் முன்னும் பின்னுமாக ‘ஜெர்க்’ கொடுத்து, மந்திர உச்சரிப்புக்கு ஏற்ப தலையை ஆட்டுவது அவரது வழக்கம். அந்த உடல் அசைவை, பவுர்ணமி நாளில் பழனி முருகன் கோவிலில் தியானித்தபோது காண முடியவில்லை.
‘மத்திய அமைச்சர் ஆகவேண்டும்’ என்பதே, பழனியாண்டவரிடம் அவரது வேண்டுதலாக இருந்திருக்கும் என்கிறார்கள், ரவீந்திரநாத்குமாரின் எண்ண ஓட்டத்தை அறிந்த, அக்கட்சியின் சீனியர்கள்.
“தமிழக எம்.பி.க்களிலேயே, மக்களவையில் அதிக அளவில், அதாவது 42 விவாதங்களில் பங்கேற்ற ஒரே எம்.பி. என்ற நற்பெயர் எடுத்திருக்கிறார் என்றால், அதற்கெல்லாம் காரணம், பக்தியின் வாயிலாக அவர் ஆன்மபலம் பெற்றிருப்பதுதான். ‘நாம் முதலில் இந்து.. அதற்கு அப்புறம்தான் மற்றது.’ என்று சின்னமனூரில் இந்து முன்னணி மேடையில், காவித்துண்டு அணிந்து, ரவீந்திரநாத்குமார் பேசியது அப்போது சர்ச்சையானது. அவரோ, ‘நான் பேசியதில் ஒரு தவறும் இல்லை..’ என்பதில் தீர்க்கமாக இருந்தார். ஏனென்றால், இந்துமத நம்பிக்கையில் அவருக்கு அத்தனை ஈடுபாடு. ‘டெல்லி போனார்; பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டார். அதனால்தான் காவி உடுத்த ஆரம்பித்திருக்கிறார்.’ என்று புரியாதவர்கள் வேண்டுமானால் அவருடைய பக்திக்கு சாயம் பூசலாம். ஆனால்.. ரவீந்திரநாத்குமார், எப்போதும் இப்படித்தான். கண்மூடி பழனியில் அவர் அமர்ந்ததும்கூட, ஒருவகையில் தர்மயுத்தமே! பிரச்சனைகள் தலைதூக்காமல் நாடு முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர், பழனியாண்டவர் சன்னதியில் என்ன வேண்டியிருந்தாலும், அது மக்கள் நலன் சார்ந்ததாகவே இருந்திருக்கும்.” என்கிறது, அவரது நட்பு வட்டம்.
“தற்போது, அதிமுக மக்களவைத் தலைவர்! அடுத்தடுத்து, அவருக்காக என்னென்ன பொறுப்புகள் காத்திருக்கின்றனவோ? தவப்புதல்வன் அல்லவா? எதிர்காலத்தையும் அறிந்தே வைத்திருக்கிறார்.” என்கிறார்கள், ‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்! நாளைய தலைமுறையின் உத்தமத் தலைவன்!’ என்றெல்லாம், ரவீந்திரநாத்குமாருக்கு நாளும் ஒரு பட்டத்தை அளித்துவரும் இளம் விசுவாசிகள்.