"கடிகாரத்திற்கான பில்லை கேட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது; இதுவரை பில் வரவில்லை; இன்று சாயங்காலத்திற்குள்ளாவது பில் வருமா?" என அண்ணாமலை குறித்த கேள்விக்கு இன்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ''பில் கேட்கிறவர்கள் எல்லாம் யாரு? நான் பில் கொடுக்கிறேன் ஏப்ரல் முதல் வாரத்தில் பில் மட்டுமல்ல எல்லாமே கொடுக்கிறோம். ஊழல்வாதிகள், மக்களுடைய பணத்தில் சம்பளம் வாங்குகிறவர்கள், எம்எல்ஏவாக மாசாமாசம் பணம் வருகிறது. இவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள். கேள்வி கேட்கக்கூடிய உரிமை மக்களுக்கு இருக்கிறது. இன்றைக்குத்தான் 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண மனிதனைப் பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கிறார்கள். எம்ஜிஆரை பார்த்தும் கேள்வி கேட்டார்கள். நாமெல்லாம் எம்ஜிஆர்க்கு நக தூசாக இருக்கக்கூடிய சாதாரண மனிதர்கள்.
இன்னைக்கு இரண்டாவது முறையாக சாமானிய மனிதனைப் பார்த்து ஆளுங்கட்சி கேட்கிறது. பில் மட்டும் இல்ல பில்லைத் தாண்டி எல்லாமே கொடுக்கிறோம். திமுக முதலமைச்சர் குடும்பம், ஒரு 13 அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்துள்ளோம். இப்பொழுதே கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாய் தொடுகிறது. இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல், காலேஜ், இந்தோனேசியாவில் இருக்கக்கூடிய போர்ட், முதல்வர் குடும்பத்தில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அவர்களுக்கு துபாய், லண்டனில் இருக்கக்கூடிய கம்பெனிகள்.
திமுக தொட்டுவிட்டார்கள் ஆனால் இதற்கு முடிவுரை நாங்கள் எழுதப் போகிறோம். இதில் செந்தில் பாலாஜி இருக்கிறார். கரூரில் 650 ஏக்கர், சாராய ஆலையில் இருக்கக்கூடிய பங்கு, சுப்ரீம் கோர்ட்டில் அவருடைய கேசுக்கு ஒவ்வொரு முறையும் ஆஜராகும் வக்கீலுக்கு ஒரு நாள் ஃபீஸ் ஒரு சாமானிய மனிதன் பத்து வருடம் சம்பாதிக்கிற காசு. 2ஜி ஊழல் எப்படி திமுகவிற்கு முடிவுரை எழுதி வீசப்பட்டதோ நாங்கள் கேட்கக்கூடிய ஒவ்வொரு கேள்வி இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பதில் வேணும். மக்களுக்கு ஒரு டோல் ஃப்ரீ நம்பரும் வெப்சைட்டும் கொடுக்கப் போகிறோம். நீங்கள் திமுகவிற்கு பினாமி சொத்து எங்காவது இருக்கிறது என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் அதை ரிஜிஸ்டர் பண்ணலாம். மக்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுக்கப் போகிறோம்'' என்றார்.