கோவையை திமுக அரசு புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் வேலுமணி ஏற்பாட்டில் கோவையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசுகையில், ''கோவையில் மிகப் பிரம்மாண்டமான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு கைவிட்டு வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்தாவது திமுக அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழுந்து மக்களுக்கு நன்மையாற்ற வேண்டும்.
அண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். ‘ஒரு முதல்வர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது முன்னாள் ஆட்சி’ என்று சொல்கிறார். யார் சொல்வது பாருங்கள், இந்த முதலமைச்சர்தான். ஒரு ஆட்சி எப்படி செயல்படக்கூடாது, ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு இந்த 18 மாத கால ஆட்சியே சான்று. திமுக ஆட்சியிலே மக்கள் என்ன பலனை கண்டார்கள். எங்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை இன்று முதலமைச்சர் பேசி வருகிறார். அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. அதை மறந்து முதல்வர் பேசி வருகிறார். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் பாழாகிவிட்டது. பத்தாண்டு ஆட்சியில் நாசமாக்கி விட்டார்கள். இந்த தமிழகத்தை பாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். பத்தாண்டு அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. அந்த ஆட்சியில் தான் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு கொடுத்தார்கள். அவரின் மறைவுக்கு பிறகு அவரது வழியில் என்னுடைய தலைமையில் சிறப்பான ஆட்சியை மக்களுக்குத் தந்தோம். அதிமுகவை குறைசொல்ல ஒரு தகுதி வேண்டும்'' என்றார்.