நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே விஜயகாந்த் பூரண குணமடைய தொண்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிரார்த்தனை செய்தனர். இதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 14 ஆம் தேதி (14.12.2023) வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.