ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாக உள்ள நிலையில், அவருக்கு எதிராக தி.மு.க.வின் சார்பு அமைப்புகள் போஸ்டர் யுத்தத்தைத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.க., இங்குள்ள தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட திராவிட இயக்கங்களை அடியோடு முடித்துக் கட்டும் வேலையில் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க.வின் திராவிட மாடல் முழக்கத்தை பா.ஜ.க.வின் சங்பரிவாரங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
ஆளுங்கட்சிக்கு எந்த வகையிலாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரே அஜண்டாவுடன் பா.ஜ.க. மேலிடம், முன்னாள் காவல்துறை உளவுப்பிரிவு அதிகாரியான ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக இறக்கி விட்டிருக்கிறது எனப் பரவலாகப் பேச்சு இருந்து வருகிறது.
ஆர்.என்.ரவியும் ஆளுநர் என்பதை மறந்து, பா.ஜ.க கொ.ப.செ. போல பொதுவெளியில் பேசி வருகிறார். ''ரிஷிகளாலும் வேதங்களாலும்தான் பாரதம் உருவாக்கப்பட்டது. சனாதன கொள்கைகள்தான் சிறந்தது'' என்றெல்லாம் ஆளுநர் ஆதாரமற்ற கருத்துகளைப் பேசி வருகிறார். இதற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில்தான், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்படவே காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நலம் கருதி செந்தில் பாலாஜி வகித்து வந்த மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியிடமும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
இது ஒருபுறம் இருக்க, சில நாள்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக தன்னிச்சையாக அறிவித்தார். தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பால் அன்று இரவே செந்தில் பாலாஜி நீக்கம் குறித்த உத்தரவை நிறுத்தி வைத்தார் ஆர்.என்.ரவி. எனினும், ஆளுநரின் திடீர் தாக்குதலை எதிர்பாராத ஆளும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள், அமைச்சர் ஒருவரை தன்னிச்சையாக நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று எதிர்வினையாற்றின.
ஊழல் புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் அமைச்சராகத் தொடரக் கூடாது என்று ஆளுநர் தரப்பு தெரிவித்தது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய தி.மு.க., மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டது. அவர்களை முதலில் அமைச்சரவையில் இருந்து வெளியே அனுப்ப பா.ஜ.க.வை வலியுறுத்தும்படி ஆளுநருக்கு ஆளும் தரப்பு சுடச்சுட பதிலடி கொடுத்தது.
இந்த பரபரப்புக்கு இடையே, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி, ஓட்டுநர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட சார்பு அமைப்புகள் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சேலம் மாநகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு எதிரான தி.மு.க.வின் போஸ்டர் யுத்தம் என்று சொல்லும் அளவுக்கு இது மக்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.
சேலம் மாநகரில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், மத்திய அரசியல் அங்கம் வகிக்கும் கிரிமினல் குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்களின் படங்கள், அவர்களின் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, மத்திய அமைச்சர்களான ஸ்ரீநிசித் பிரமானிக் (11 வழக்குகள்), ஜான் பார்லா (9 வழக்குகள்), முரளிதரன் (7 வழக்குகள்), கிரிராஜ் சிங் (6 வழக்குகள்), பங்கஜ் சவுத்ரி (5 வழக்குகள்), சத்தியபால் சிங் பாகேஜ் (5 வழக்குகள்), அஸ்வினிகுமார் சவுபே (3 வழக்குகள்), அஜய்குமார் மிஸ்ரா (1 வழக்கு) ஆகியோரின் படங்கள் போஸ்டர்களில் அச்சிடப்பட்டுள்ளன.
மேலும், ''ராஜ்பவன் ஆர்.என்.ரவி, எங்கள் அமைச்சரை நீக்க நீ யார்? டெல்லிக்குச் செல். இவர்களை மந்திரி பதவியில் இருந்து உடனடியாக நீக்கச் சொல். கொலை, கொள்ளை குற்ற வழக்குகளைச் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை பதவி நீக்கம் செய்யச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதிவிட்டாயா?'' என்றும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாஜக பிரமுகர் ஒருவர் கூறுகையில், ''தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே இதுபோன்ற அரசியல் ரீதியான தாக்குதல்கள் இருப்பது சகஜம்தான். தி.மு.க.வினர் ஆளுநரை ஒருமையில் கண்டித்து போஸ்டர் ஒட்டினால் அதற்கான எதிர்வினைகளை ராஜ் பவன் மூலமாக சந்திக்க வேண்டியதிருக்கும்.
பா.ஜ.க. அமைச்சர்களை விமர்சித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். தி.மு.க.வில் புகாருக்குள்ளான முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர்களின் படங்களுடன் நாங்களும் இதேபோல் பதிலடி கொடுப்போம். கட்சி மேலிடம் அனுமதி கேட்டிருக்கிறோம்'' என்றார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.