நேற்று முன்தினம் (10/08/2021) காலைமுதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களிலிருந்து ரூபாய் 13.08 லட்சம் ரூபாய் மற்றும் நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களின் பரிவர்த்தனை ஆவணங்கள், ரூபாய் 2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகள், முறைகேடு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், வேலுமணியின் வங்கிக் கணக்கு மற்றும் வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பே முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் மீதான இந்த ரெய்டு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது, சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது என அதிமுக தனது கருத்தினைத் தெரிவித்துவருகிறது. இந்நிலையில், அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மனோஜ் பாண்டியன் உட்பட 6 பேர் அந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.