திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், இன்று (15.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டமானது அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களில் கூட்டணி ஒன்று அமையவில்லை என்பது ஒன்று. கூட்டணி என்பது, அவ்வப்போது வரும் போகும். ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது.கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி அமைத்த வரலாறு அதிமுகவிற்கு மட்டும் தான் உண்டு. எந்த கட்சிக்குத் தொண்டர்கள் இல்லாத அளவிற்குத் தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக தான்.
அதிமுக கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் அட்டைகளை வீடு வீடாகச் சென்று அளித்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி அதிமுக. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெறும் 1.98 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்ற காரணத்தினால் தான் ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதிமுக 34 இடங்களில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மட்டும் வாங்கியிருந்தால் அதிமுகவில் இன்னும் 23 பேர் எம்.எல்.ஏ.க்களாக ஆகியிருப்பார்கள். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் என 43 இடங்களை இழந்துவிட்ட காரணத்தினால் ஆட்சியை இழந்துவிட்டோம்.
பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவில்லை. பல்வேறு பொய்களை வாரி விட்டார்கள். எந்த கட்சியில் 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியுமே இப்படி பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி எதுவுமில்லை. அதனை திமுக தான் மக்களை ஏமாற்றி கொல்லைப்புறத்தின் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளது” எனப் பேசினார்.