திமுகவிற்கு இருப்பது போல் பாஜகவிற்கும் ஆளுநர் உரையில் ஒப்புதல் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் பேசிய பேச்சில் அவரது சொந்தக் கருத்து எதுவும் இல்லை. முழு உரையில் தமிழக அரசை ஆளுநர் பாராட்டிப் பேசியுள்ளார். கடந்த முறை ஆளுநர் உரை முடிந்தபின் அதை எதிர்த்து நான் அறிக்கை கொடுத்திருந்தேன். ஆளுநர் உரையை நான் ஏற்கமாட்டேன் என்றும் கூறியிருந்தேன்.
இந்த ஆளுநர் உரையிலும் சில இடங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஏனென்றால், திமுகவை பாராட்டிப் பேசியுள்ளார். திமுக கொடுத்ததை அப்படியே படித்துள்ளார். அரசு கொடுத்ததை அப்படியே படிக்கவில்லை என்பது திமுகவின் பிரச்சனை. அரசு கொடுத்ததை ஆளுநர் அப்படியே படித்தார் என்பது பாஜகவின் பிரச்சனை. அதில் எவ்வளவு பொய்.
ஆளுநர் திமுகவை பாராட்டி அறிக்கை வாசித்துள்ளார். அதையே நான் குற்றம் சுமத்துகிறேன். திமுக அரசு கொடுத்த உரையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்த முதலீட்டில் தமிழகம் தான் அதிகளவில் வாங்கியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆளுநர் அதை விட்டுவிட்டார். ஆளுநர் அதைப் படித்தார் என்றால் அவர் பொய்சாட்சி சொல்லியுள்ளார் என அர்த்தம். கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு வந்த முதலீடு குறைவு தான். அதை எப்படி ஆளுநர் படிக்க முடியும். அது பொய்.
திமுக அரசுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஒன்று தான். அரசு கொடுப்பது தான் ஆளுநர் படிக்க வேண்டும். அதுவே மரபு. தயவு செய்து உண்மையை ஆராய்ந்து கொடுங்கள். ஆளுநர் தன் சொந்தக் கருத்தை ஒரு இடத்திலும் வைக்கவில்லை. எனக்கும் ஆளுநர் உரையில் பிரச்சனை இருக்கிறது. அவர் திமுக கொடுத்ததை அப்படியே படிக்கக்கூடாது. இது பாஜகவின் கருத்தும் கூட” எனக் கூறினார்.