தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்பியும் ஆண்டிபட்டி முன்னாள் எம்எல்ஏவுமான தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் உள்ள பாஜக அரசையும், தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசையும் மாற்ற வேண்டும் என்பதுதான் தற்போதைய பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நிலைப்பாடு. அதுபோல் அதிமுகவில் புதிய தலைமையை தமிழகம் எதிர்பார்க்கிறது. அது டிடிவி தினகரன் தான். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு உள்ளது.
தேனியில் ஓ.பி.எஸ். குடும்பம் மன்னர் ஆட்சி நடத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஓ.பி.எஸ்.க்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் ஒரு சில அதிகாரிகள் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இருந்தாலும் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெறும். அதுபோல் இடைத்தேர்தல் நடைபெறும் பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
இதற்கு முன்பு பெரம்பலூரில் பேசிய தங்க தமிழ்ச் செல்வன், தேனி பாராளுமன்றத் தொகுதியில் எனக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித் தருவார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்தால் நல்லது. ஆளுங்கட்சிக்கு உடனே ரிசல்ட் கொடுக்கிறார்கள். ஆனால் எங்கள் கட்சியை நசுக்க பார்க்கிறார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி இரைக்கிறார்கள். அதுவும் தெருத்தெருவாக ரோட்டில் பணத்தை போட்டுக் கொண்டு போகிறார்கள். அந்த அளவுக்கு அத்துமீறல் நடக்கிறது. அதை போலீசார் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். பணம் மட்டுமே முதலீடாக வைத்து தேர்தலை பார்க்க முடியாது. பணத்தை கொடுத்தால் யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். மக்கள் மனநிலை நேரத்திற்கு ஏற்ப மாறும். பணம் அதிகாரத்தை வைத்து வெற்றி பெற முடியாது. அதுபோல் பாஜக மற்றும் அதிமுக அரசுக்கு பொதுமக்களிடம் நல்ல பெயரும் இல்லை என்று கூறினார்.