மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தியாவை போலவே தமிழக தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்துவரும் நிலையில் தேர்தல் பணிகளோடு சேர்த்து பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறி விமர்சனம் வைத்துவருகின்றனர்.
அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த முறை திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற எம்.பிக்களை குறிக்கும் வகையில் ‘கண்டா வரச் சொல்லுங்கள் என்று அதிமுகவினர் போஸ்டர் அடித்து தமிழகம் முழுவதும் ஒட்டி விமர்சித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பதிலுக்கு திமுகவினர், அதிமுகவின் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு யாரும் வராததால் ‘கண்டா வரச் சொல்லுங்கள்..’ என்று விமர்சனம் செய்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
அதிமுக ஒட்டிய போஸ்டரில் வெறும் கண்டா வரச் சொல்லுங்க என்ற வாக்கியம் மற்றும் இடம்பெற்றிருந்த நிலையில், திமுக ஒட்டியுள்ள போஸ்டரில், ‘கண்டா வரச் சொல்லுங்க...’ நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தேவை என்று குறிப்பிட்டு, தேவையான தகுதிகள் ‘பாஜகவை எதிர்ப்பது போல நடிக்கத் தெரிந்த கட்சிகளுக்கு முன்னுரிமை, கட்சியில் பத்து பேரோ, ஒரே ஒருத்தரோ இருந்தால் கூட போதும், குறிப்பாக சுயமரியாதை, சூடு, சொரணை இருக்கவே கூடாது, முக்கியமாக நாங்க தான் உண்மையான அதிமுக என்பதை நம்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.