
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர் கலைஞர் மற்றும் கேரள மழை வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

’’1.20 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். எந்த தேர்தலையும் சந்திக்க தயார்’’என்று இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாகவும்,
’’மூத்த நிர்வாகிகள் பதவிகளை துறந்து தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் எனது பதவியை கூட துறக்க தயார். ஆட்சியை விட கட்சியே முக்கியம். கட்சி பலமாக இருந்தால் ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளலாம். கட்சிக்காக பதவியைகூட துறக்க தயார் ’’என்று ஓ.பன்னீர்செல்வம் இக்கூட்டத்தில் பேசியதாகவும் தகவல்.