விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தங்கை ஜெயஸ்ரீ, குடும்ப முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்
(1/3)
— சீமான் (@SeemanOfficial) May 11, 2020
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சிறு மதுரை. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் - ராஜி தம்பதிகளுக்கு ஜெயராஜ், ஜெயஸ்ரீ, ராஜேஸ்வரி, ஜெபராஜ் என நான்கு குழந்தைகள் உள்ளனர். ஜெயபால் தனது ஊரில் இரண்டு இடத்தில் பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ தீயில் எரிந்த நிலையில் கடையில் கிடப்பதாகச் செல்போன் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து பதறியடித்துக் கடைக்கு ஓடி பார்த்திருக்கிறார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்துள்ளதைப் பார்த்து கதறிய பெற்றோர், உடனடியாகத் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெயஸ்ரீ அளித்த மரண வாக்குமூலத்தில், அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் அருவியின் கணவர் முருகன் மற்றும் அதிமுக கிளைக் கழகச் செயலாளர் ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து கடைக்குள் புகுந்து தன்னை கட்டிப் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இந்தநிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவி ஜெயஸ்ரீ, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாணவி ஜெயஸ்ரீ மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தங்கை ஜெயஸ்ரீ, குடும்ப முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கேற்கிறேன். பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப்பகைக்கு குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடூரமான செயல். இதற்குக் காரணமானவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.