நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு முதன்முதலாக இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடியது. இன்றைய நிகழ்வில் மறைந்த உறுப்பினர்களுக்கான இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கலந்துகொள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலினை வரவேற்பதற்காக திமுக உறுப்பினர்கள் வாசலில் காத்திருந்தனர். அப்போது வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவர்கள் கூட்டமாக நிற்பதைப் பார்த்து என்னப்பா எல்லாரும் மறியல் பண்றிங்களா என சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு திமுக உறுப்பினர்கள் நீங்க சொன்னா பண்ணுகிறோம் என்று கூறினர். உடனே அவர் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.
அதன்பின் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வந்தார். அவர் வரும்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் அவரது கையைப் பிடித்து இழுத்து நீங்களும் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் எனக்கூறினார். உடனே சுதாரித்துக்கொண்ட செல்லூர் ராஜூ சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.