மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் சுதீஷ் மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக முதல்வர், துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த அதிருப்தியால் கூட்டணியில் ஏதேனும் மாற்றம் வருமா, தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறுமா அல்லது வெளியேற்றப்படுமா என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,மதுரையில் தே.மு.தி.க சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசும் போது, "தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் தமிழக முதல்வர் ஆவார்.எனவே, தொண்டர்கள் இப்போதே விழிப்புடன் பணியாற்ற வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் சில கட்சிகள் நம்மை சாதி, மதத்தால் பிரிக்க முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தை வன்முறை பூமியாக மாற்ற நினைக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் கட்சியாக களத்தில் நிற்பது தே.மு.தி.க தான் என்றும் பேசினார். பின்பு உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. கரோனா வைரஸ் கிருமியைவிட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மோசமானவர்" என்று கூறினார். இதனால் திமுகவினர் தேமுதிகவின் பிரேமலதா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.