Skip to main content

'அதிமுகவில் பிளவா? அடுத்த பொறுப்பு எனக்கா?'- அமைச்சருக்கு செங்கோட்டையன் பதில்

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
nn

அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் போகிறதா? அல்லது செங்கோட்டையன் தலைமையில் போகிறதா? வேலுமணி தலைமையில் போகிறதா? என்பது ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின் தெரிய வரும் எனத் தமிழக சட்டத்துறை அமைச்சர் பேசியதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் போகிறதா? அல்லது செங்கோட்டையன் தலைமையில் போகிறதா? வேலுமணி தலைமையில் போகிறதா? என்பது வருகிற ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின் தெரிய வரும். ஜெயக்குமார் கூட சொல்லி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பதவிவிலக வேண்டும் செங்கோட்டையன் பொறுப்புக்கு வரவேண்டும் என்றெல்லாம் ஜெயக்குமார் சொல்லியிருந்த செய்திகள் பத்திரிகைகளில் வந்திருக்கிறது. எனவே அங்கு ஒரு மிகப்பெரிய பிளவு உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதை நாங்கள் செய்ய மாட்டோம். ஆனால் பாஜக செய்யும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ''அதிமுகவிற்கு என்றைக்கு சோதனை வருகின்ற போதும் 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் நேர்வழியில் சென்று கொண்டு இருக்கிறேன். இது மாற்றுக் கட்சியில் உள்ளவர்களுக்கும் தெரியும். நேற்றைய தினம் சட்ட அமைச்சர் கொடுத்திருக்கின்ற கருத்து என்பது வருந்தத்தக்க ஒன்று, கண்டனத்திற்குரிய ஒன்று. ஒரு பொதுவாழ்க்கையில் இருக்கின்றவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து புரிந்து இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இதுபோன்ற கருத்துக்களை வைப்பதற்கு முன்னால் சிந்தித்து வெளிப்படுத்துவது தான் அவரைப் போன்ற அரசியல்வாதிக்கு ஏதுவாக அமையும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் மாற்றார் கூட 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் குறை சொல்லாத வண்ணம் என் வாழ்க்கை பயணத்தில் நேர்வழியில் சென்று இருக்கிறேன்'' என்றார்.

சார்ந்த செய்திகள்