Skip to main content

வரம்பு மீறிய பேருந்துகளுக்கு அபராதம்; கலெக்டரின் அதிரடி வைத்தியம்!

Published on 22/02/2025 | Edited on 22/02/2025

 

Nellai Collector imposes fines on buses exceeding the limit

நெல்லையிலிருந்து கீழ்பகுதியான திருச்செந்தூர், ஆத்தூர், ஏரல், முக்காணி, காயல்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட அனைத்து நகர, கிராமங்களுக்குச் செல்கிற பேருந்துகளின் முக்கிய வழிச்சாலைகள் ஆரம்ப வாயிலான ஸ்ரீவைகுண்டம் சாலையைக் கடந்து தான் மேற்படி அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும். ஆனால் வரலாற்றின் குறிப்பிடும்படியான ஸ்ரீவைகுண்டம் நகரமோ, சாலையை ஒட்டியுள்ள தாமிரபரணி ஆற்றுப் பாலத்தைக் கடந்து தான் சென்றடைய வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனாலும் அந்தப் பகுதியின் வழிபாட்டுத் தலங்கள் பிற கிராமப் புறங்களின் மக்களின் நடமாட்டமுள்ள பரபரப்பான நகரமாக ஸ்ரீவைகுண்டம் இருக்கிறது. 

பொது மக்களின் போக்குவரத்து நலனுக்காகவே மேற்படி அனைத்து பகுதிகளுக்கும் இந்த வழியில் செல்கிற அனைத்து அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் சென்று பயணிகளை இறக்கிவிட்டு, பின் அங்குள்ள பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதே பேருந்துகளுக்கான போக்குவரத்துச் சட்டமாக காலங்காலமாக  பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த வழியில் வருகிற மேற்படி அனைத்துப் பேருந்துகளும்  ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் புறக்கணித்துவிட்டு மக்களை அலட்சியப்படுத்தி புதுக்குடி மெயின் ரோட்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டுச் சென்று வருகிறது. இதனால் மூட்டை முடிச்சுப் பிள்ளைகளோடு பயணிகள் ஊருக்குள் செல்ல சிரமப்பட்டனர்.  இது போன்ற பேருந்துகளை நம்பி வெளியூர் செல்லக் காத்திருக்கிற ஸ்ரீவைகுண்டம் பகுதி பயணிகளுக்கு தவிப்பும் ஏமாற்றமும் தான் மிச்சம். இரவு நேரமென்றால் மக்களுக்கு ஆபத்து மட்டுமல்ல பீதியும்  தொற்றிக்கொள்ளும். 

Nellai Collector imposes fines on buses exceeding the limit

பேருந்துகளின் சட்டத்தை மதிக்காத போக்கும், சோம்பேறித்தனங்களால் ஸ்ரீவைப்குண்ட பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட நகர பொதுமக்களோ நிலைமையைத் தெளிவுபடுத்தி அரசுக்கும் ஆட்சியருக்கும் கோரிக்கை மனுக்களைத் தொடர்நது அனுப்பி வந்தனர். அதனடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகளும், ஆட்சியரும், பேருந்துகள் ஊருக்குள் கட்டாயம் சென்று திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டும் அவைகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. நிவாரணம் கிட்டாத நிலையில் மக்கள் இதற்கான தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியரான இளம்பகவத்திடம் மக்கள் இந்தக் கோரிக்கையை வைக்க, கலெக்டரும் உடனடி உத்தரவிட்டும் பேருந்துகள் ஜூட் விட்டிருக்கின்றன. இந்த நிலையில் பிப். 19 அன்று கலெக்டர் இளம்பகவத், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திடடத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அவரிடம் பேருந்துகள் ஊருக்குள் வராமல் செல்வது குறித்து ஸ்ரீவைகுண்ட பகுதிமக்கள் கூட்டமாகச் சென்று முறையிட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து ஆய்வை முடித்த பின் இரவு வரை அங்கிருந்த கலெக்டர், இரவு 8 மணிமுதல் 10 மணிவரை வருவாய்த் துறையினருடன் சென்று மெயின் சாலையில் நின்று கொண்டு கண்காணித்தவர், மாவட்ட எல்லையான செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடி சென்றும் கண்காணித்திருக்கிறார். அது சமயம் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற ஆறு பேருந்துகளை நிறுத்தி விசாரித்திருக்கிறார். இதில் 5 அரசுப் பேருந்துகள் ஒரு தனியார் பேருந்து என 6 பேருந்துகள் சிக்கியிருக்கின்றன. அந்தப் பேருந்துகளின் டிரைவர்களோ, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழிகளில் மட்டுமே செல்வதாகவும், ஸ்ரீவைகுண்டம் பஸ் நிறுத்தம் கிடையாது என்றும் கூறியிருக்கின்றனர். அதிர்ந்த கலெக்டர், அவர்களிடம், வழித்தட அனுமதி கொடுப்பதே நாங்கள் தான். எந்த ஒரு பேருந்தையும் ஸ்ரீவைகுண்டத்திற்குள் செல்ல வேண்டாமென கூறவில்லையே. உங்களிடம் உத்தரவிருக்கிறதா? என்று கேட்டவரிடம், அதற்கு கண்டக்டர்களும், டிரைவர்களும் சேர்ந்தே, “நாங்க எந்தத் தவறும் செய்யல. எங்கள் நிர்வாகம் கூறிய வழிமுறைகளைத் தான் பின்பற்றுகிறோம்..” என்று தெரிவித்துள்ளனர்.

Nellai Collector imposes fines on buses exceeding the limit

அதற்கு, “நிர்வாகம் என்பது யார்? நாங்க தானே நிர்வாகம். நீங்க பொது மக்களை ஊருக்குள் சென்று இறக்கிவிட்டு பின் அங்குள்ள பயணிகளை ஏற்றாமல் அவர்களை இடையில் இறக்கிவிட்டால் என்ன அர்த்தம். அவர்களுக்காகத் தானே பேருந்துகள் இயக்கப்படுகின்றன”என்று வறுத்தெடுத்தார். மேலும், சரி. நெல்லை - திருச்செந்தூர் இடையே பைபாஸ் சாலையே இல்லையே, பிறகு எப்படி பைபாஸ் ரைடர்னு பெயரிட்டு வைச்சிறுக்கீக என சரமாரியாக அவர்களிடம் கேள்விகளைக் கலெக்டர் கிண்டியெடுக்க தலை கவிழ்ந்த டிரைவர்கள், அது மேலிடம் உத்தரவு என்று சன்னமான குரலில் கூறியுள்ளனர்.

அதற்கும், “மேலிடம்னா யாரு? நாங்கதான மேலிடம். யார் சொன்னா? சொல்லுங்க என்று கேள்வி எழுப்பிய ஆட்சியர்,  சில டிரைவர்களிடம் “நீங்க மக்களுக்காகப் பஸ் ஓட்டவில்லை. ரேசுக்காகப் பஸ் ஓட்டுகிறீர்கள். தொடர்ந்து இப்படி நடந்து கொண்டால் பர்மிட்களை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என்று கட் அன் ரைட்டாகச் சொன்னார். ஐந்து அரசுப் பேருந்துகள் மற்றும், தனியார் பேருந்து என்று 6 பேருந்துகளுக்கும் தலா 10 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டவர், இதன் பிறகும் ஊருக்குள் செல்லாமல் சென்றால் அபராதம் கடுமையாகும் என்று எச்சரித்துள்ளார். இதனால் ஷாக்காகியிருக்கிறது போக்குவரத்து வட்டாரங்கள்.

Nellai Collector imposes fines on buses exceeding the limit

இதனிடையே மக்களோடு அங்கிருந்த காமராசு என்பவர், “ஐயா, சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து தினமும் நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த செய்துங்கநல்லூர் பேருந்து நிலையத்திற்குத் தான் வந்திறங்குறாக. ஆனா இந்தப் பேருந்து நிலையத்தில டாய்லெட்டோ, அவசர சிறுநீர் கழிப்பிடமோ கட்டப்படல. அதுக்காக 30 வருஷமா போராடுறோம்யா” என்று கோரிக்கை வைக்க, ‘ஏற்பாடு செய்றேன்..’ என்று  என்று சொன்ன கலெக்டர் மறுநாள் அதற்கான எஸ்டிமேட்டை விரைவு படுத்தியிருக்கிறார்.  

சார்ந்த செய்திகள்