Skip to main content

"சிங்கப்பூரில் உதவி கேட்பது ஏமாற்று வேலை" - திண்டுக்கல் சீனிவாசன்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

dindigul srinivasan talks about cm foreign trip karur it raid 

 

கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச்  சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சட்டப்படி என்ன இருக்க வேண்டும் என்று மாணவர் நலன் கருதி மத்திய அரசு நிபந்தனை விதிக்கிறார்கள். அந்த மாதிரி இல்லாத இடங்களை எல்லாம் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இந்த குறைபாடுகளுக்கு சில தொழில்நுட்பக் காரணங்கள் இருக்கலாம். எனவே தவறான நடவடிக்கை எடுத்தால் கண்டிப்போம். சரியான முடிவு எடுத்தால் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுப்போம்.

 

செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திமுகவினர் மற்றும் கரூர் மேயர் ஆகியோர் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி, அதிகாரிகள் மருத்துவமனையில் இருக்கிறார்கள். மடியில் கணம் இல்லை வழியில் பயம் இல்லை என்று சொல்லும் திமுகவினர் வருமான வரித்துறையினரை தாக்குவது ஏன்? வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 

சிங்கப்பூர் ஒரு குட்டி தீவு. சென்னையை விட சிறிது. ஒரு மணி நேரத்தில் சுற்றிப் பார்த்துவிடலாம். அங்கே சென்று உதவி கேட்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது; ஏமாற்று வேலை. முதல்வரின் சுற்றுப்பயணமானது கோடை வெயிலுக்காக அவரது வீட்டுச்சுற்றுலா நிகழ்ச்சி. எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று வந்தபிறகு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என்பது பற்றி வெள்ளை அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு எந்த மரியாதையும் கிடைக்காது. கடந்த 10 வருட ஆட்சியில் எல்லா சாலைகளும் அமைக்கப்பட்டது என்பது பொதுமக்களுக்கு தெரியும். காவிரி ஆறு, வைகை ஆறு மற்றும் தண்ணீர் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டன.

 

அதிமுக ஆட்சியில் ஒரு பைசா கூட வரி விதிக்கவில்லை. இப்போது எங்கு பார்த்தாலும் வரி விதிக்கின்றனர். வரி வசூல் செய்யவில்லை என்றால் அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை என்று சொல்கிறார்கள். அதிமுக ஆட்சியில் வரி வசூல் செய்யவில்லை என்றாலும் அரசு மூலம் சம்பளம் கொடுத்தோம். செந்தில் பாலாஜி ஒரு சதுரடி கூட வாங்கவில்லை என்று சொன்னார். அப்படி என்றால் ஏன் கரூர் மேயர் வருமான துறையினரை அடிக்கின்றார். இதனை பொதுமக்கள் நம்பமாட்டார்கள். இன்று காலை ஒரு செய்தி வந்தது. ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் 10 கோடி ரூபாய், உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன." எனப் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்