
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி நிர்வாகிகளுடன் மதுரையில் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் பின் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “திருப்பூரில் வட மாநிலத்தவர்கள் தமிழர்களை தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்குவார்கள் என நான் இதற்கு முன்பே கூறி வந்துள்ளேன். இது தொடக்கம் தான். நாளை நாம் அனைவரையும் தாக்கலாம். அடித்து விரட்டுவார்கள். அவர்களை ஆதரிக்க ஒரு கூட்டம் உள்ளது. வட இந்தியர்கள் ஏற்கனவே இங்கு உள்ளனர். இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் உள்ளதே அவர்கள் அனைவரும் ஆதரிப்பார்கள். அவர்கள் எல்லாம் பாஜக வாக்காளர்கள். இது புதிது அல்ல. இதற்கு முன்பு நடந்துள்ளது. இது தொடர்ந்து நடக்கும்.
அதிமுக என்று ஒரு கட்சி இல்லை. அதனால் என்ன ஆகிவிடப் போகிறது. இருந்து என்ன நடந்தது. நாங்கள் தான் அனைத்து கட்சிகளுக்கும் மாற்று. அதிமுக இரு பிரிவுகளாக இருப்பதால் பாஜக வளர்வதாக சொல்லுகிறார்கள். பாஜக வளராது. அப்படி வளர்ந்தால் என்னை மாதிரி தனியாக நிற்குமா. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து நிற்கலாமே” எனக் கூறினார்.