ஜெயலலிதாவின் 4-வது நினைவு தினம் (டிசம்பர்-5) நாளை அணுஷ்டிக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். உறுதி மொழி எடுத்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அதிமுக தலைமைக்கு எதிராக வாள் சுழற்றுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஜெயலலிதாவின் நினைவு நாளில் அண்ணா சாலையிலிருந்து அமைதி பேரணியாக புறப்பட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதுதான் அதிமுகவின் வழக்கம். ஆனால், இந்த முறை அமைதி பேரணி வேண்டாம் என எடப்பாடி சொல்லி விட்டாராம். கரோனா கட்டுப்பாடுகளால் அமைதி பேரணி நடத்துவதை தவிர்க்கலாம் என்பதே இதற்கு காரணமாம்.
இதனையறிந்து ஆதங்கப்படும் அதிமுகவின் மாநில நிர்வாகிகள், கரோனா கட்டுப்பாடுகள் இருந்தும் கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதிர்க்கட்சிகள் நடத்துகின்றன. அதனை எடப்பாடி அனுமதிக்கிறார். அப்படியிருக்கும் நிலையில், அம்மாவின் (ஜெ.) நினைவு நாளில் பேரணி நடத்த தடை போடலாமா? என கேள்வி எழுப்புகிறார்கள். அதிமுகவினரின் இந்த ஆதங்கம், எடப்பாடிக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.