எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பல்வேறு வாதங்கள் மற்றும் முறையீடுகளுக்கு பிறகு அவ்வழக்கின் நீதிபதி மாற்றப்பட்டு புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 11.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, ''ஓபிஎஸ்-ஐ ஆதரித்து நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். சினிமா நடிகர் அஜய் ரத்தினம் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து எங்களுடன் சேர்ந்துள்ளார். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்று சொன்னால் ஓபிஎஸ் அலை வீசுகிறது தமிழகமெங்கும். தினந்தோறும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'ஓபிஎஸ் பக்கம் 80 சதவீதம் பேர் இல்லை வெறும் 80 பேர்தான் உள்ளனர்' என ஜெயக்குமார் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த புகழேந்தி, ''ஜெயக்குமார் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டேன் என்கிறார். நான் அன்னைக்கே சொன்னேன் '4800 கோடி ரூபாய் ஊழல். ஆனால் அதற்கு சிபிஐ விசாரணை வேண்டாமாம். இங்கு கதவை அடைத்தார்கள், ரோட்டில் கலாட்டா செய்தார்கள் என (அதிமுக அலுவலகத்தில் நடந்த தாக்குதல்) பொய் புகார் கொடுத்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று பேசக்கூடிய நபராகத்தான் ஜெயக்குமார் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி என்ற சர்வாதிகாரியின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது. தெருவிலே நிற்கப் போகிறார்கள்'' என்றார்.